மோசடியின் பேரில் பதவி நீக்கப்பட்ட நபர், கிழக்கு ஆளுநரின் இணைப்புச் செயலாளராக நியமனம்

🕔 October 14, 2023

– றிப்தி அலி –

ழல் குற்றச்சாட்டுக்கள் காரணமாக புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட கலாநிதி செனரத் ஹேவகே, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் இணைப்புச் செயலாளராக செயற்படுகின்ற விடயம் தகவலறியும் விண்ணப்பத்தின் ஊடாக தெரியவந்துள்ளது.

கடந்த 2022 பெப்ரவரி 10ஆம் திகதி புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் தலைவராக இவர் நியமிக்கப்பட்டார்.

இப்பணியகத்தின் தலைவர் பதவியினை வைத்துக்கொண்டு மூதூர் – ஷாபி நகர் கிராமத்தில் மணல் மோசடியில் ஈடுபட்டதாக கலாநிதி செனரத் ஹேவகேயிற்கு எதிராக கடந்த நொவம்பர் மாதம் நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டன.

இதனையடுத்து, புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் தலைவர் பதவியிலிருந்து கலாநிதி செனரத் ஹேவகே நீக்கப்பட்டார்.

இவ்வாறான நிலையில், கிழக்கு மாகாண ஆளுநராக செந்தில் தொண்டமான் ஜனாதிபதி ரணில் விக்கரமசிங்கவினால் கடந்த மே 17ஆம் திகதி நியமிக்கப்பட்டார்.

இதனையடுத்து, கிழக்கு ஆளுநர் செந்தில் தொண்டமானின் இணைப்புச் செயலாளர்களில் ஒருவராக கலாநிதி செனரத் ஹேவகே நியமிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எல்.பி. மதநாயக்க தெரிவித்தார்.

இந்த நியமனம் காரணமாக, கிழக்கு மாகண பிரதம செயலாளரின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ள EP-PJ5773 எனும் இலக்க வாகனமும் இவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக தகவலறியும் விண்ணப்பத்திற்கான பதிலில் ஆளுநரின் செயலாளர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வாகனத்தின் பாவனைக்காக மாதாந்தம் 213 லீற்றர் எரிபொருளும் கலாநிதி செனரத் ஹேவகேயிற்கு வழங்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

வேறு பதவியைக் குறிப்பிட்டு சீனா பயணம்

இதேவேளை, கிழக்கு மாகாண ஆளுநரின் பிரத்தியோகச் செயலாளர் அனில் விஜயசிறியும், கலாநிதி செனரத் ஹேவகேயும் கடந்த ஓகஸ்ட் மாதம் சீனாவின் வூஹான் மாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டனர்.

இதன்போது கலாநிதி செனரத் ஹேவகே, கிழக்கு மாகாண ஆளுநரின் ஆலோசகர் என அறிமுகப்படுத்தியுள்ள விடயம் சில சீன இணையத்தளங்களின் ஊடாக தெரியவந்துள்ளது.

இதேவேளை, புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தின் முன்னாள் தலைவரை தனது இணைப்புச் செயலாளராக வைத்துக்கொண்டு கிழக்கு மாகாணத்திலுள்ள கனிய வளங்களை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் சில அதிரடி உத்தரவுகளை ஆளுநர் செந்தில் தொண்டமான் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மேற்கொண்டிருந்தார்.

இந்த உத்தரவுகளுக்கமைய, மாகாணத்திலுள்ள கனிய மணல் மற்றும் கைத்தொழில் சார் கனிய வளங்கள் தொடர்பான முன்மொழிவுகள், ஆளுநர் செயலகத்திலுள்ள மாகாண கனிய மதிப்பீட்டுக் குழுவினால் மதீப்பீடு செய்யப்பட்டு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுவிற்கு அனுப்பப்படும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இல்லாத அதிகாரத்தை கையில் எடுத்துள்ள செந்தில்

அரசியலமைப்பின் 13ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் மாகாண சபைகளுக்கு ‘கனிய மணல்’ தொடர்பான அதிகாரங்கள் எதுவும் வழங்கப்படாத நிலையிலேயே ஆளுநரின் இந்த உத்தரவுகள் அமையப்பெற்றிருந்தன.

இதற்கு புவிச் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகம் பாரிய எதிர்ப்பினை வெளியிட்டதுடன் அரசியலமைப்பினை மீறி ‘கனிய மணல்’ விடயத்தில் ஆளுநர் தலையீடு செய்வதாக குற்றஞ்சாட்டியது.

அது மாத்திரமல்லாமல், கிழக்கு ஆளுநரின் இந்த உத்தரவுகளுக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் இடைக்கால தடையுத்தரவும் புவித் சரிதவியல் அளவை சுரங்கப் பணியகத்தினால் தற்போது பெறப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்பான செய்தி: கிழக்கு ஆளுநர் சுற்றுநிருபத்தை மீறி தனிப்பட்ட உத்தியோகத்தர்கள் 21 பேரை நியமித்துள்ளமை அம்பலம்: அவர்களில் ஒருவர் மட்டுமே கிழக்கத்தவர்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்