கிழக்கு ஆளுநர் சுற்றுநிருபத்தை மீறி தனிப்பட்ட உத்தியோகத்தர்கள் 21 பேரை நியமித்துள்ளமை அம்பலம்: அவர்களில் ஒருவர் மட்டுமே கிழக்கத்தவர்

🕔 October 12, 2023

– றிப்தி அலி –

னாதிபதியின் செயலாளரினால் வெளியிடப்பட்ட சுற்றுநிரூபத்தினை மீறி, கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், தனது தனிப்பட்ட உத்தியோகத்தர்களாக 21 பேரை நியமித்துள்ள விடயம் தகவலறியும் விண்ணப்பத்தின் ஊடாக தெரிய வந்துள்ளது.

கடந்த 2018.10.12ஆம் திகதி ஜனாதிபதியின் செயலாளரினால் வெளியிடப்பட்ட பீஎஸ்/சீஎஸ்ஏ/00/1/4/2ஆம் இலக்க சுற்றுநிரூபத்தின் பிரகாரம் ஆளுநரின் தனிப்பட்ட உத்தியோகத்தர்களாக 15 பேரை மாத்திரமே நியமிக்க முடியும்.

ஆனால், ஆளுநர் செந்தில் தொண்டமான் இச்சுற்றுநிரூபத்தின மீறி 21 பேரை தனது தனிப்பட்ட உத்தியோகத்தர்களாக நியமித்துள்ளார். இவர்களுள் ஐந்து பேர் – தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்பட்டுள்ளதாக கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் எல்.பி. மதநாயக்க தெரிவித்தார்.

மேற்படி 21 பேரில் சுகாதாரத் தொழிலாளி ஒருவர் மாத்திரமே கிழக்கு மாகாணத்தினைச் சேர்ந்தவராவார். ஜனாதிபதியின் செயலாளருடைய சுற்றுநிரூபத்தின் பிரகாரம் ஆளுநருக்கு வழங்கப்பட்டுள்ள இரண்டு வாகனங்களுக்கு இரண்டு சாரதிகள் மாத்திரமே நியமிக்க முடியும்.

ஆனால், ஆளுநர் செந்தில் தொண்டமானுக்கு மூன்று சாரதிகள் செயற்படுகின்றனர் என கிழக்கு மாகாண ஆளுநர் செயலகத்தினால் தகவலறியும் விண்ணப்பத்திற்கு வழங்கப்பட்ட பதிலில் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு மேலதிகமாக தற்காலிக அடிப்படையில் இரண்டு சமையற்காரர்களும், மூன்று சுகாதாரத் தொழிலாளர்களும் ஆளுநர் செந்தில் தொண்டமானினுடைய தனிப்பட்ட உத்தியோகத்தர்களாக செயற்படுவதாக கிழக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் தெரிவித்தார்.

இதேவேளை, கிழக்கு ஆளுநருக்காக திருகோணமலையில் இரண்டு அலுவலகங்களும், அம்பாறையில் ஒரு உப அலுவலகமும் செயற்படுகின்றன. ஆளுநர் செயலகத்துக்கு மேலதிகமாக திருகோணமலையில் செயற்படும் அலுவலகம் மாகாண விவசாய அமைச்சுக்கு சொந்தமானதாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்