நாடாளுமன்ற சபையில் ஆடை கழற்றிய அமைச்சர் தொடர்பில், சபாநாயகரிடம் முறைப்பாடு

முறையற்ற ஆடையுடன் அமைச்சர் ஒருவர் நாடாளுமன்ற சபைக்குள் அண்மையில் பிரவேசித்த நிலையில், அவர் தனது அங்கியை அங்கேயை கழற்றியதாக, ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார இன்று (19) சபையில் குற்றஞ்சாட்டினார்.
எனவே இந்த அநாகரீகமான செயலுக்கு எதிராக, குறித்த அமைச்சர் மீது நடவடிக்கை எடுக்குமாறு சபாநாயகரிடம் அவர் கோரிக்கை விடுத்தார்.
சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல மீதான நம்பிக்கையில்லாப் பிரேரணை மீதான வாக்கெடுப்பின் போது, சபையில் இருந்த அமைச்சர் ஒருவர் அணிந்திருந்த ‘கோட்’ ஐ கழற்றியதாக அவர் இதன்போது விபரித்தார்.
“சபைக்குள் ஆடைகளை யாரும் கழற்ற முடியாது. அது உங்களை அவமதிக்கும் செயல். அப்படி யாராவது கால்சட்டையை கழற்றினால் அதுவும் பொருந்தாது. சபாநாயகர், அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் என உங்களுக்கு பொறுப்பு உள்ளது” என்று கூறிய அவர், அநாகரீகமாக நடந்து கொண்டதற்காக அஅவரின் வாக்கை ரத்து செய்யுமாறும் சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார்.
இதன்போது பதிலளித்த சபாநாயகர், சபையில் இவ்வாறான ஆடைகளை அணிவதை தவிர்க்குமாறு அமைச்சருக்கு ஆலோசனை வழங்குவதாகவும், அமைச்சரின் வாக்கெடுப்பை ரத்துச் செய்ய அவருக்கு உரிமை இல்லை எனவும் தெரிவித்தார்.