கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தினரின் அசட்டைக்கு எதிராக சாய்ந்தமருதில் ஆர்ப்பாட்டம்

– பாறுக் ஷிஹான், நூருல் ஹுதா உமர், எஸ். அஷ்ரப்கான் –
சாய்ந்தமருதில் கரையோரப் பாதுகாப்பு திணைக்களத்தினர் கடலரிப்பபைத் தடுப்பதற்கு எனத் தெரிவித்து – பாரிய முண்டுக் கற்களை மீன் பிடி நடவடிக்கைகளுக்காகப் போக்குவரத்து செய்யும் பாதையில் போட்டுவிட்டு, பல நாட்கள் கடந்தும் எதுவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதைக் கண்டித்து, இன்று (16) மீனவர்கள் ஆர்ப்பாட்டம் மேற்கொண்டனர்.
சாய்ந்தமருது பெண்கள் சந்தைக்கு அருகில் உள்ள கடற்கரை வீதி பாதையை தோணிகளைக் கொண்டு மறித்து மீனவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டத்தினால் சில மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாய்ந்தமருதில் ஏறு்பட்டுள்ள கடலரிப்பு மற்றும் அதிகாரிகளின் இவ்வாறான நடவடிக்களால் தங்களது நாளாந்த மீன் பிடி தொழில் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதற்குஉரிய அதிகாரிகள் உடனடியாக தீர்வு காண வேண்டும் எனவும் இதன்போது மீனவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதேவேளை சாய்ந்தமருது பொலிஸாரும் கரையோரப் பாதுகாப்பு தரப்பினரும் ஆர்ப்பாட்ட இடத்துக்கு வருகைதந்து மீனவர்களுடன் சமரசமாகப் பேசினர். இதன்போது கற்கள் போடும் வேலைகளை துரிதமாக செய்வதாக உறுதி வழங்கப்பட்டமைக்கு இணங்க மீனவர்கள் தோணிகளை பாதையிலிருந்து அகற்றினர்.
மீனவர்களின் இந்த ஆர்ப்பாட்டத்தில் சாய்ந்தமருது முன்னாள் பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

