முன்னைய ஆட்சியின் கொலைகள்; துலங்கும் மர்மங்களும், திடுக்கிடும் தகவல்களும்

🕔 January 27, 2016
Shani - 097பிரகீத் எக்நேலியகொடவுக்கு நீதியை பெற்றுக்கொடுக்க ராணுவத்தினருடன் மோதும் இந்த ஏ.எஸ்.பி ஷானி அபேசேகர யார்? குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் பணியாற்றும் ஷானி அபேசேகர அந்த திணைக்களத்தில் இருக்கும் முதல் தர புலனாய்வு விசாரணையாளர்.

அவரது பெயர் நாட்டில் தற்போது பெரும்பாலும் பேசப்படும் பெயராக மாறியுள்ளது. பொலிஸ், ஊடகங்களில் மாத்திரமல்லாது அரசியல் மேடைகளிலும் இவர் பேசப்படும் நபராக மாறியுள்ளார்.

அண்மைக்கால வரலாற்றில் பெரும் பரப்பரப்பை ஏற்படுத்திய எந்த குற்றச் செயலாக இருந்தாலும் அந்த விசாரணைகளுக்கு ஷானி அபேசேகரவே தலைமை தாங்கியிருந்தார். இவர் மேற்கொண்ட அனைத்து விசாரணைகளிலும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

ஷானி அபேசேகர

உதவி சுங்க அத்தியட்சகர் சுஜித் பிரசன்ன, றோயல் பார்க் யுவதியின் கொலை, அங்குலான கொலை, மொஹமட் சியாம் கொலை, ஹசித மடவல கொலை, முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்காவை குறி வைத்து கொழும்பு நகர சபை மைதானத்தில் நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல், கொள்ளுப்பிட்டி பித்தளை சந்தியில் கோத்தபாய ராஜபக்சவை இலக்கு வைத்து நடத்தப்பட்ட தற்கொலை குண்டு தாக்குதல், களனி திஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்தின் மீதான தாக்குதல் போன்ற நாட்டில் மிகவும் பரப்பரப்பாக பேசப்பட்ட கொலைகள் மற்றும் குற்றச் செயல்கள் உட்பட பல சம்பவங்களின் விசாரணை அதிகாரியாக ஷானி அபேசேகரவே செயற்பட்டார்.

அங்குலான கொலை சம்பவம் தொடர்பில் குற்றச்சாட்டை எதிர்நோக்கிய அங்குலான பொலிஸ் நிலைய பெறுப்பதிகாரி உட்பட பொலிஸார், சியாம் கொலை வழக்கில் குற்றம் சுமத்தப்பட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் வாஸ் குணவர்தன உட்பட தனது மேலதிகாரிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் ஷானி அபேசேகரவின் விசாரணைகள் அமைந்திருந்தன.

சட்டத்தை சட்டத்திற்கு அமைய நிறைவேற்ற வேண்டும் என்பது அவரது கொள்கை.

பொலிஸ் அதிகாரி என்ற வகையில் தனக்கு வழங்கப்பட்ட பொறுப்பை தெய்வ பணியை விட உயர்ந்த பணி எனக் கருதி நிறைவேற்றுவார் என பொலிஸ் திணைக்களத்தில் பணியாற்றும் பெரும்பாலானவர்கள் கூறுகின்றனர்.

ஷானி அபேசேகரவிடம் ஒரு விசாரணையை ஒப்படைத்தால், வேலை சரியாக நடக்கும் என அவர் கூறுவார்கள். அந்தளவுக்கு ஷானி அபேசேகர மீது அதிகாரிகள் கடும் நம்பிக்கை கொண்டுள்ளனர்.

ஷானி அபேசேகர தற்போது பெரும் பரப்பரப்பாக பேசப்படும் ஒருவராக மாறியுள்ளார். சுதந்திர ஊடகவியலாளர் பிரகீத் எக்நேலியகொட காணாமல் போன சம்பவம் தொடர்பான விசாரணைகளின் பிரதிபலனாக இராணுவ புலனாய்வாளர்கள் சிலர் கைது செய்யப்பட்டமையே இந்த பரப்பரப்புக்கு காரணம்.

பொய்கள்

மைத்திரி அரசாங்கம் ஆட்சிக்கு வரும் வரை பிரகீத் எக்நேலியகொட காணாமல் போன சம்பவம் இரகசியமான ஒன்றாக இருந்து வந்தது.

கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்தில் சட்டமா அதிபராகவும் பிரதம நீதியரசராகவும் இருந்த மொஹன் பீரிஸ், பிரகீத் எக்நேலியகொட வெளிநாட்டில் வாழ்ந்து வருவதற்கான தகவல்கள் இருப்பதாக ஐ.நா மனித உரிமை பேரவையில் தெரிவித்திருந்தார். அவர் அன்று கூறியது அவரது கருத்தல்ல அன்றைய அரசாங்கத்தின் கருத்தையே கூறியிருந்தார்.

பிரகீத் எக்நேலியகொட காணாமல் போன சம்பவம் குறித்து மைத்திரி அரசாங்கம் ஆரம்பத்தில் இருந்து விசாரணை நடத்த தொடங்கியதை அடுத்து எக்நேலியகொட தொடர்பாக அன்றைய அரசாங்கம் கூறியது அனைத்தும் பொய் என தெரியவந்தது.

கடத்தப்பட்டதாக நாடகமாடி பிரகீத் எக்நேலியகொட நாட்டில் இருந்து தப்பிச் சென்று விட்டார் என அன்றைய அரசாங்கம் சில அரசியல்வாதிகள் மாத்திரமல்ல சில பாதுகாப்பு தரப்பினரும் அன்று மக்களுக்கு கூறிய கதைகள் பொய்யாக மாறியது.

பிரகீத் நாட்டில் இருந்து தப்பிச் செல்லவில்லை அவரை இராணுவத்தின் புலனாய்வு பிரிவினர் கடத்திச் சென்று காணாமல் போக செய்துள்ளனர் என்பது தெளிவான சாட்சியங்கள் மூலம் உறுதியாகியுள்ளது.

இந்த விசாரணைகளில் பிரகீத் எக்நேலியகொட காணாமல் போன சம்பவம் மாத்திரமல்லாமல், தெஹிவளையில் கொலை செய்யப்பட்ட சுதந்திர ஊடகவியலாளர் சம்பத் லக்மால் கொலை தொடர்பான மர்மமும் வெளியாகியமை விசேட அம்சமாகும்.

அத்துடன் பிரகீத் எக்நேலியகொட காணாமல் போன சம்பவம் தொடர்பான விசாரணையுடன் நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் நாராஹேன்பிட்டியில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையும் தொடங்கியது.

மர்மக் கொலைகள்

நடராஜா ரவிராஜ் கொலை தொடர்பாக விசாரணை நடத்த அன்றைய மகிந்த ராஜபக்ச அரசாங்கம் ஸ்கொட்லாந்து பொலிஸாரின் உதவியையும் பெற்றுக்கொண்டமை மறந்து விடக் கூடாது.

ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸார் இலங்கைக்கு வந்து இந்த கொலை சம்பவம் தொடர்பான விசாரணைகளை நடத்தியது முக்கியமான விடயமாகும். எனினும் உலகில் மிக சிறந்த குற்றப்புலனாய்வு விசாரணை பொலிஸார் எனக் கூறப்படும் ஸ்கொட்லாந்து யார்ட் பொலிஸாரல் கூட ரவிராஜ் கொலை செய்யப்பட்ட மர்மத்தை கண்டுபிடிக்க முடியவில்லை.

மேலும் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய மற்றுமொரு கொலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலையாகும். நத்தார் ஆராதனையில் கலந்து கொண்டிருந்த அவர், தேவாலயத்திற்குள் வைத்தே சுட்டுக்கொல்லப்பட்டார்.

பல காலமாக மர்மமாக இருந்து வந்த இந்த கொலை சம்பவம் மட்டுமல்லாது எக்நேலியகொட காணாமல் போன சம்பவம் ஆகிய சம்பவங்கள் குறித்த விசாரணைகளை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் உத்தரவின் பேரில் பொலிஸ் மா அதிபர் என்.கே. இலங்ககோன் குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைத்தார்.

இந்த விசாரணைகளுக்கு பொறுப்பாக குற்றப் புலனாய்வு திணைக்களத்தின் அதிகாரிகள் ஷானி அபேசேகரவை நியமித்தனர்.

என்று தீர்க்கப்பட முடியாது எனக் கூறப்பட்ட இந்த சம்பவங்கள் குறித்து விசாரணைகளை நடத்தி குற்றவாளிகளை சாட்சியங்களுடன் அடையாளம் கண்டு அவர்கள் ஒவ்வொருவராக கைது செய்யப்பட தொடங்கியதும் ஷானி அபேசேகரவுக்கு என்றுமில்லாதபடியான தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகின்றன.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் ஆகியோரின் கொலை மற்றும் எக்நேலியகொட காணாமல் போன சம்பவம் ஆகியவற்றுடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டு விட்டனர்.

இந்த கொலைகள் மற்றும் காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மற்றும் குற்றம் சுமத்தப்படும் அனைவரும் இராணுவ புலனாய்வு பிரிவின் உறுப்பினர்கள்.
இவர்களில் விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து விலகிய கருணா மற்றும் பிள்ளையான் தரப்பினரும் உள்ளனர். இதனடிப்டையிலேயே கிழக்கு மாகாண முதலமைச்சராக இருந்த பிள்ளையானும் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜோசப் பரராஜசிங்கத்தை கொலை செய்ததாக பிள்ளையான் மற்றும் அவரது சகாக்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதில் இராணுவ புலனாய்வு பிரிவுக்கு தொடர்பிருப்பதாக கண்டறியப்பட்டுள்ளதுடன் கொலைக்கு பயன்படுத்திய துப்பாக்கிய இராணுவ புலனாய்வு பிரிவுக்கு சொந்தமானது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

தேசிய பாதுகாப்பு அச்சுறுத்தலான நபர் என தேசிய பாதுகாப்புக்காக எடுக்கப்படட தீர்மானத்திற்கு அமைய ஜோசப் பரராஜசிங்கம் கொலை செய்யப்படவில்லை என விசாரணைகளில் கண்டறியப்பட்டது. அரசியல் தேவைக்கு அமைய இந்த கொலை நடந்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்தது. இது சம்பந்தமாக பல விடயங்கள் வரும் காலத்தில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்படலாம்.

அதேபோல் இராணுவ புலனாய்வு பிரிவின் முழுமையான திட்டத்திற்கு அமையவே கொழும்பு நாராஹேன்பிட்டியில் வைத்து நாடாளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலை செய்யப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.

கருணா மற்றும் பிள்ளையானின் குழுவினர், இராணுவப் புலனாய்வு பிரிவினர், பொலிஸாரும் இந்த கொலையுடன் சம்பந்தப்பட்டிருப்பது முக்கிய அம்சமாகும். இவர்களும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் இந்த விசாரணைகளின் பிரதிபலனாக, கொழும்பு வர்த்தகர்களின் பிள்ளைகள் கடத்திச் செல்லப்பட்டு கப்பம் பெறப்பட்டமை, அந்த பிள்ளைகள் கொலை செய்யப்பட்ட சடலங்கள் கடலில் மூழ்கடிக்கப்பட்டு காணாமல் போக செய்தமை சம்பவங்கள் பற்றிய தகவல்களும் தெரியவந்துள்ளது.

ரவிராஜ் கொலை தொடர்பில் நீதிமன்றத்தில் சாட்சி விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய கொலை சம்பந்தமான சாட்சி விசாரணைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன.

இந்த கொலைகள் தேசிய பாதுகாப்பு கருதி மேற்கொள்ளப்பட்டதா அல்லது எவரது தேவைக்காக மேற்கொள்ளப்பட்டதா என்பதை கைது செய்யப்பட்டுள்ள இராணுவ புலனாய்வு பிரிவு உறுப்பினர்கள் மாத்திரமல்லாது, கருணா மற்றும் பிள்ளையான் தரப்பினரும் வெளியிடுவார்கள்.

இந்த சம்பவங்களில் பிரகீத் எக்நேலியகொட கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணை சம்பந்தமாகவே ஷானி அபேசேகரவுக்கு எதிராக கடும் தாக்குதல்கள் தொடுக்கப்பட்டு வருகின்றன.

பிரகீத் எக்நேலியகொட

பிரகீத் எக்நேலியகொட கடத்தப்பட்ட சம்பவம் முதல் அவர் காணாமல் போக செய்யப்பட்ட சம்பவம் வரையான அனைத்து விடயங்களுடன் தொடர்புடையவர்கள் அனைவரும் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் ஆறு பேர் இராணுவப் புலனாய்வு பிரிவை சேர்ந்தவர்கள்.

கடத்தலுக்கான திட்டமிட்ட சந்தர்பபம் முதல் காணாமல் போக செய்யப்பட்டமை வரை இவர்கள் சம்பந்தப்பட்ட விதம் குறித்து விஞ்ஞான ரீதியான சாட்சியங்களை குற்றப் புலனாய்வு திணைக்களம் குறைவின்றி திரட்டிள்ளது.

விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்த காரணத்தினால், எக்நேலியகொட கடத்தப்பட்டதாக விசாரணைகளின் போது இராணுவ புலனாய்வுப் பிரிவு உறுப்பினர்கள் முதலில் கூறியிருந்தனர்.

எனினும் அன்றைய மகிந்த ராஜபக்ச அரசாங்கத்திற்கு எதிராக எக்நேலியகொட எழுதிய புத்தகம், ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு ஆதரவாக எழுதிய கட்டுரைகள், அரசாங்கத்தை விமர்சித்து தயாரிக்கப்பட்ட கவிதைகள் அடங்கிய குறுந்தகடு என்பனவே எக்நேலியகொடவின் கடத்தலுக்கு காரணம் என்பது இராணுவ புலனாய்வுப்பிரிவு உறுப்பினர்களின் வாக்குமூலம் மற்றும் சாட்சியங்கள் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

எக்நேலியகொடவிடம் தேசிய பாதுகாப்பு சம்பந்தமான பிரச்சினை குறித்தோ, விடுதலைப் புலிகளுடன் இருந்த தொடர்பு பற்றியோ விசாரணை நடத்தியமைக்கான சாட்சியங்கள் எதுவும் கிடைக்கவில்லை. கிரித்தலே பிரதேசத்தில் உள்ள மூன்றாவது இராணுவப் புலனாய்வுப் பிரிவின் முகாமில் வைத்தே பிரகீத் எக்நேலியகொட விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

எக்நேலியகொடவை முகாமுக்கு கொண்டு வந்தவர்கள், அவரிடம் விசாரணை நடத்திய சில புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பதிவு செய்த குறிப்புகள் தற்போது குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் உள்ளன. பிரகீத் எக்நேலியகொட விடுதலைப் புலிகளுடன் தொடர்பு வைத்திருந்தார் என்பதை உறுதிப்படுத்தும் எந்த சாட்சியங்களையும் இராணுவப் புலனாய்வுப் பிரிவு குற்றப் புலனாய்வு திணைக்களத்திடம் வழங்கவில்லை என்பதும் இங்கு முக்கியமான விடயமாகும்.

எக்நேலியகொட கடத்திச் செல்லப்பட்டு காணாமல் போக செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வாளர்களின் இரண்டு இராணுவ கேர்ணல்களும் அடங்குகின்றனர்.

கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களிடம் எக்நேலியகொட காணாமல் போக செய்யப்பட்டமை சம்பந்தமாக விடயங்களை தவிர, அதற்கு முன்னார் அவர்கள் நாட்டின் பாதுகாப்புக்காக மேற்கொண்ட நடவடிக்கைகள், அதனுடன் தொடர்புடைய ஆவணங்களை விசாரணை அதிகாரிகள் கேட்கவுமில்லை, கோரவுமில்லை என குற்றப் புலனாய்வு திணைக்கள தகவல்கள் கூறுகின்றன.

எவருடைய தேவைக்காக பிரகீத் எக்நேலியகொட கடத்தப்பட்டார் என்ற கேள்வி மாத்திரமே தொடர்ந்தும் கேட்கப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே குளவி கூட்டின் மீது கல்லெறிந்தது போல் ஒரு கூட்டம் குழம்பிக் கொண்டிருக்கின்றது.

கிடைத்துள்ள தகவல்களின் படி எக்நேலியகொடவை கடத்திச் செல்ல யார் உத்தரவிட்டது, யாரிடம் இருந்து ஆலோசனை கிடைத்து என்பதை குற்றப் புலனாய்வு திணைக்களம் கண்டறிந்துள்ளது.

எக்நேலியகொட காணாமல் போன சம்பவம் தொடர்பான விசாரணைகளில் சகல தகவல்களும் வெளியாகும் என்பதுடன் கிரித்தலே முகாமில் புலனாய்வுப் பிரிவு கோப்ரல் ஒருவர் கொலை செய்யப்பட்டு முச்சக்கர வண்டியுடன் சேர்த்து புதைக்கப்பட்ட சம்பவம் பற்றிய தகவலும் வெளியாகும்.

ஆஜின் பிரேமகுமார என்ற இந்த ராணுவ புலனாய்வுப் பிரிவு கோப்ரல் 2007 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் திகதி பொலன்நறுவை கல்லேல்ல பிரதேசத்தில் வைத்து கடத்திச் சென்று கொலைசெய்து முச்சக்கர வண்டியுடன் புதைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

ராணுவப் புலனாய்வுப் பிரிவை சேர்ந்த இந்த கோப்ரல், இனத்துரோகி அல்லது காட்டிக்கொடுத்தார் என்பதற்காக கொலை செய்யப்படவில்லை. கிடைத்துள்ள தகவல்களின்படி கொலை செய்யப்பட்ட கோப்ரல், இராணுவப் புலனாய்வுப் பிரிவை சேர்ந்த சிரேஷ்ட அதிகாரியின் மனைவியுடன் கள்ளத் தொடர்பு வைத்திருந்தார் என்ற சந்தேகத்தின் பேரில் கடத்திச் செல்லப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.

மேற்படி கோப்ரல் காணாமல் போன சம்பவம் குறித்து விசாரணை நடத்திய பொலிஸ் பரிசோதகர் மர்மமான முறையில் தன்னைதானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு உயிரிழந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது சுட்டுக்கொல்லப்பட்டாரா என்பதை அறிய தற்போது விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

புலனாய்வுப் பிரிவின் கடமை என்ற போர்வையில் செய்த இவ்வாறான குற்றங்கள் வெளியாகும் போது அந்த விசாரணைக்கு பொறுப்பான செயற்படும் ஷானி அபேசேகர போன்ற அதிகாரிகளை இனத்துரோகிகள் என்பது உண்மையில் நியாயமானதா என்று கேள்வி எழுப்ப வேண்டும்.

ஷானி அபேசேகர என்பவர் யுத்தம் கடுமையாக நடைபெற்ற 1985 ஆம் ஆண்டு முதல் 1995 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் பொலிஸ் விசேட அதிரடிப்படையில் கடமையாற்றியதுடன், போரில் நேரடியான பங்களிப்பை வழங்கிய அதிகாரியாவார்.

விடுதலைப் புலிகளின் பிரதேசத்துக்குள் புகுந்து தாக்குதல்களை நடத்தியுள்ள ஷானி அபேசேகர, புலனாய்வு தொடர்பில் சிறந்த அனுபவங்களை கொண்டுள்ளார். 30 வருடங்களாக பொலிஸ் சேவையில் பணியாற்றி வரும் அவர் தனது பெயரைக் கெடுத்து கொண்ட அதிகாரி அல்ல என்பது இங்கு முக்கியமானது.

(நன்றி: லக்பிம)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்