வரட்சியினால் நெற் செய்கைக்கு ஏற்பட்ட சேதங்களை மதிப்பிடுமாறு உத்தரவு

🕔 August 7, 2023

ரட்சி காரணமாக நெற்செய்கைக்கு ஏற்பட்டுள்ள சேதங்களை மதிப்பிடும் நடவடிக்கைகளை உடனடியாக ஆரம்பிக்குமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர விவசாய மற்றும் கமநல காப்புறுதி சபைக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

வடமத்திய மாகாண விவசாயிகளின் பிரதிநிதிகளுடன் நேற்று அனுராதபுரம் மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலைத் தொடர்ந்து, கமநல காப்புறுதி சபையின் தலைவர் டப்ளியூ.எம்.எம்.பி. வீரசேகரவுக்கு இந்த உத்தரவை விவசாய அமைச்சர் விடுத்தார்.

இதேவேளை விவசாய இழப்பீடாக ஹெக்டேருக்கு 100,000 வழங்கப்படுகின்றமை போதுமானதாக இல்லை எனவும் அமைச்சர் கூறினார்.

கடந்த ஆண்டு ஏற்பட்ட பயிர்ச் சேதங்களுக்காக 1.7 பில்லியன் ரூபாய் வழங்கப்பட்டதாகவும், இந்த ஆண்டு அது அதிகரிக்க வாய்ப்புள்ளது எனவும் அவர் குறிப்பிட்டார்.

கலந்துரையாடலைத் தொடர்ந்து இவ்விடயம் தொடர்பில் கருத்து தெரிவித்த அமைச்சர் அமரவீர, “வறட்சி காரணமாக நெற்பயிர்ச் செய்கைக்கு ஏற்பட்ட சேத அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பித்து அதற்கான இழப்பீட்டை கமநல காப்புறுதி சபையின் ஊடாக வழங்க எதிர்பார்த்துள்ளோம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்