நாட்டில் 90 வீதமான மீனவர்களுக்கு நீச்சல் திறன் இல்லை: ஆய்வில் வெளியான தகவல்

🕔 July 25, 2023

நாட்டிலுள்ள 90 வீதமான மீனவர்களுக்கு நீச்சல் திறன் இல்லை என – இலங்கை உயிர்காக்கும் சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை உயிர்காக்கும் சங்கத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி அசங்க நாணயக்கார டெய்லி மிரருக்கு இதனைத் தெரிவித்தார், பெரும்பாலான மீனவர்கள் தங்களுக்கு நீந்த முடியும் என்ற நம்பிக்கை கொண்டுள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார்.

அனர்த்த முகாமைத்துவ நிலையம் மூலம் – நாடு முழுவதும் சமீபத்தில் நடத்தப்பட்ட ஆய்வுகளைத் தொடர்ந்து இந்தத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

“மீனவர்களுக்கு இருக்கும் நீச்சல் திறன் கடலில் உயிரைக் காப்பாற்ற போதுமானதாக இல்லை.

ஒரு நீச்சல் வீரர் 10 நிமிடங்களில் அமைதியான நீரில் குறைந்தது 200 மீட்டர் தொடர்ந்து நீந்தக்கூடிய திறன் பெற்றிருக்க வேண்டும்.

சர்வதேச அளவுகோல்களின்படி, உயிரைக் காப்பாற்றுபவர் – ஒரு நபரைக் காப்பாற்ற ஆறு நிமிடங்களில் 200 மீட்டர் நீந்தக்கூடிய திறன் பெற்றிருக்க வேண்டும்.

கடல் போன்ற வேகமான நீரில், ஒரு நீச்சல் வீரர் 400 மீட்டர்களை ஒன்பது நிமிடங்களில் நீந்த வேண்டும் என்பதும், ஒரு உயிர்காக்கும் நபர் அமைதியான நீரில் நீந்த – குறைந்தபட்சம் 06 நிமிடங்களாவது எடுக்க வேண்டும் என்பதும் உடற்பயிற்சி தரநிலையாகும்.

இலங்கையில் தினமும் மூன்று பேர் நீரில் மூழ்கி உயிரிழப்பதாக சுகாதார அமைச்சின் பதிவுகள் தெரிவிக்கின்றன.

மீனவர்கள் தங்கள் உயிர்காக்கும் ஜாக்கெட்டுகளை அணிவதில்லை” என்றும் அசங்க நாணயக்கார கூறினார்.

“அனைத்து மீன்பிடி படகுகளுக்கும் ஜாக்கட்டுகள் வழங்கப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை பயன்படுத்தப்படவில்லை, ஆனால் அவை உயிரைக் காப்பாற்ற உதவும். அனர்த்த முகாமைத்துவ நிலையம் வழங்கும் ‘லைஃப் ஜாக்கெட்டுகள்’ தரமானவை. ஆனால் மீனவர்கள் யாரும் அவற்றினைப் பயன்படுத்துவதில்லை. கடலில் எந்த தண்ணீரிலும் நீந்த முடியும் என்பதால் அந்த ஜாக்கெட்டுகள் தங்களுக்குத் தேவையில்லை என்று அவர்கள் கருதுகின்றனர்” என்றும் அவர் தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்