ஐ.தே.கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளர் ஆதம்லெப்பைக்கு, சூரிய ஒளியில் மின் உற்பத்தி செய்யும் முதலீட்டாளர் சம்மேளனம் நன்றி தெரிவிப்பு

🕔 July 17, 2023

– முன்ஸிப் அஹமட் –

ட்சி பேதங்கள் இன்றி தன்னால் இயன்ற உதவிகளை மக்களுக்கு தான் செய்து கொண்டிருப்பதாகவும், தன்னிடம் உதவிகள் கேட்டு வருகின்றவர்களிடம் அவர்கள் எந்தக் கட்சியின் ஆதரவாளர்கள் எனக் கேட்பதில்லை எனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதி பிரதம அமைப்பாளரும், லொயிட் குழும தலைவருமான யூ.கே. ஆதம்லெப்பை தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டம் – அட்டாளைச்சேனையைத் தளமாகக் கொண்டியங்கும் ‘சூரிய ஒளியில் மின் உற்பத்தி செய்யும் முதலீட்டாளர் சம்மேளனம்’ (Roof top solar power inverters federation), யூ.கே. ஆதம்லெப்பையை கௌரவித்து, அவருக்கு நன்றி தெரிவிக்கும் நிகழ்வொன்றினை நேற்று (16) நடத்தினர். இதில் கலந்து கொண்டு பேசும் போதே, அவர் மேற்கண்ட விடயங்களைக் கூறினார்.

அட்டாளைச்சேனை பிரதேசம் உட்பட கல்முனை மின் பொறியியலாளர் பிராந்தில் சூரிய ஒளியில் மின்சாரத்தை உற்பத்தி செய்து, அதனை இலங்கை மின்சார சபைக்கு வழங்கி வரும் முதலீட்டாளர்களுக்கு பல மாதங்களாக இலங்கை மின்சார சபை – கொடுப்பனவுகளை வழங்காமல் இழுத்தடித்து வந்தது.

இந்த நிலையில், தமக்கான கொடுப்பவுகளைப் பெற்றுக் கொள்வதற்காக, மேற்படி முதலீட்டாளர்கள் பல்வேறு நடவடிக்கைகளில் இறங்கியிருந்தனர். அவை எதுவும் வெற்றியளிக்காத நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளர் ஆதம்லெப்பையிடம் மேற்படி முதலீட்டாளர்கள் சென்று தமது நிலையினை முறையிட்டிருந்தனர்.

இதனையடுத்து மேற்படி விவகாரத்தை ஜனாதிபதியின் செயலாளர் மட்டத்துக்கு கொண்டு சென்ற ஆதம்லெப்பை, இது தொடர்பில் நடவடிக்கைகளை மேற்கொண்டார். இவ்விடயம் நடைபெற்று ஒரு வாரத்தினுள், சூரிய ஒளியில் மின் உற்பத்தி செய்யும் முதலீட்டாளர்களுக்கான கொடுப்பனவுகள் கிடைத்தன.

இந்தப் பின்னணியில், நீண்டகாலமாக கிடைக்காமலிருந்த தமது கொடுப்பனவைப் பெற்றுத்தர உதவிபுரிந்த – அமைப்பாளர் ஆதம்லெப்பைக்கு நன்றியினையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கும் பொருட்டு, அக்கரைப்பற்றிலுள்ள தனியார் உணவகமொன்றில் நேற்று நிகழ்வொன்றினை மேற்படி முலீட்டாளர் சம்மேளம் ஏற்பாடு செய்திருந்தது.

இதன்போது மேற்படி சூரிய ஒளி மின்சார உற்பத்தி முதலீட்டாளர் சம்மேளனத்தின் தலைவர் ஓய்வுபெற்ற திட்டமிடல் பணிப்பாளர் ஐ.எல். தௌபீக், செயலாளர் கே.எல்.எம். முனாஸ் (ஆசிரியர்), பொருளாளர் ஏ.எல். முனாஸ் மற்றும் உறுப்பினர்கள் இணைந்து – ஆதம்லெப்பைக்கு நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்ததோடு, தங்கள் கொடுப்பனவுகளைப் பெற்றுத்தர உதவியமைக்காக தமது நன்றியினையும் தெரிவித்தனர்.

இதன்போது அங்கு தொடர்ந்து உரையாற்றிய ஐக்கிய தேசியக் கட்சியின் பொத்துவில் தொகுதி பிரதம அமைப்பாளர் ஆதம்லெப்பை; “எமது கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்க தேர்தலில் வெற்றி பெறாதபோதும், அவருக்கு ஜனாதிபதி பதவி கிடைத்தது. கடந்த பொதுத் தேர்தலில் நானும் போட்டியிட்டிருந்தேன். ஆனால் வெற்றி கிடைக்கவில்லை. இருந்தபோதும் கட்சியில் எனக்கு முக்கிய பதவி கிடைத்துள்ளது.

இந்த வகையில் பார்த்தால் நமக்கு பதவிகளை இறைவனே வழங்குகின்றான். எனக்கு கிடைத்துள்ள பதவிகளை வைத்து, மக்களுக்கு முடிந்தவரையில் நான்உதவிகளைச் செய்கிறேன். நீங்கள் என்னிடம் உதவி கேட்டபோது நான் செய்தேன். மீண்டும் உதவி கேட்டால் செய்யத் தயாராக இருக்கின்றேன்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Comments