கோட்டக் கல்வி அதிகாரியாக தனக்கு விரும்பிய தகைமையற்றவரை நியமிக்காததால் ஆத்திரமடைந்த ஹாபிஸ் நசீர்: கிழக்கு ஆளுநரை திட்டியதன் பின்னணி குறித்து விளக்கம்

🕔 July 14, 2023

கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தொடர்பில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் அமைச்சருமான ஹாபிஸ் நசீர் அஹமட் – கடுமையான வார்த்தைகளைப் பயன்படுத்தி பேசியிருந்தமை தொடர்பில், கிழக்கு மாகாண ஆளுநரின் ஊடகப் பிரிவிலிருந்து தெளிவுபடுத்தலொன்று வெளியிடப்பட்டுள்ளது.

காத்தான்குடி பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டம் கடந்த 12ஆம் திகதி நடைபெற்ற போது, அந்தக் கூட்டத்துக்கு தலைமை வகித்த அமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் – கிழக்கு ஆளுநர் குறித்து மோசமாகப் பேசியிருந்தார்.

காத்தான்குடி கோட்டக்கல்வி அதிகாரி பதவிக்கு – புதியவர் ஒருவர் நியமிக்கப்பட்டமை தொடர்பில் ஆத்திரமடைந்த நிலையிலேயே ஹாபிஸ் நசீர் இவ்வாறு ஆளுநரைத் திட்டிப் பேசியிருந்தார்.

அந்த நியமனம் தொடர்பில் ஆளுநரின் ஊடகப் பிரிவு விளக்கமளித்துள்ளது.

காத்தான்குடி கோட்ட கல்வி அதிகாரி பதவி வெற்றிடத்துக்கு தகுதியுடைய ஒருவர் நியமிக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கு எதிராக அமைச்சர் ஹாபிஸ் நசீர் பேசியுள்ளார் என ஆளுநர் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.

சில காலங்களுக்கு முன்னர் – காத்தான்குடி கோட்ட கல்வி அதிகாரி பதவி வெற்றிடம் ஏற்பபட்டிருந்த நிலையில், அந்த பதவிக்கு இலங்கை கல்வி சேவை தரம் 3 (SLEAS GRADE 3) தகுதியுடையவர்கள் இல்லாமையால், தற்காலிக அதிகாரியாக இலங்கை அதிபர் சேவையின் தரம் 1 (SLPS GRADE 1) தகுதியை கொண்ட எம்.எம். ஹலாவுதீன் என்பவர் நியமிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இலங்கை கல்வி சேவை தரம் 3 (SLEAS GRADE 3) தகைமையுடைய ஏ.ஜி. மொஹமட் ஹக்கீம் என்பவர் – காத்தான்குடி கோட்ட கல்வி அதிகாரியாக கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் அண்மையில் நியமிக்கப்பட்டார்.

எனினும் தற்காலிகமாக நியமிக்கப்பட்டிருந்த இலங்கை அதிபர் சேவையின் தரம் 1 ( SLPS GRADE 1) தகுதியுடைய அலாவுதீன் என்பவர், காத்தான்குடி கோட்டக்கல்வி அதிகாரியாக தொடர்ந்தும் பதவி வகிக்க வேண்டும் எனவும் இலங்கை கல்வி சேவை தரம் 3 (SLEAS GRADE 3) நிறைவு செய்தவருக்கு கோட்ட கல்வி அதிகாரி நியமனம் வழங்க கூடாது எனவும் கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருக்கு – அமைச்சர் ஹாபிஸ் நசீர் அழுத்தம் கொடுத்தார்.

இதனையடுத்து, இந்த விடயத்தை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமானின் கவனத்துக்கு கல்வி அமைச்சின் செயலாளர் கொண்டுவந்தார். அவ்விடயத்தை ஆராய்ந்த ஆளுநர் செந்தில் தொண்டமான், கல்வி அமைச்சின் சட்ட திட்டங்களுக்கு அமைவாக இவ்விடயத்தில் நடவடிக்கை மேற்கொண்டு, தகுதியுடையவருக்கு இந்நியமனத்தை வழங்குமாறு கல்வி அமைச்சின் செயலாளருக்கு உத்தரவிட்டார்.

இதனையடுத்தே, இவ்விடயத்தில் தனது விருப்பத்துக்கு மாறாக ஆளுநர் நடந்துள்ளமையினால், அவரை அமைச்சர் ஹாபிஸ் நசீர் கடுமையாக திட்டியதாகவும், ஆனால் மேற்படி நியமனத்தில் ஆளுநர் நேர்மையாக நடந்து கொண்டமைக்கு முஸ்லிம் அமைப்புக்கள் நன்றியினைத் தெரிவித்துள்ளதாகவும், ஆளுநரின் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்