நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் பொன்னம்பலம் கைது

🕔 June 7, 2023

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கொழும்பிலுள்ள அவரது வீட்டில் வைத்து இன்று (07) காலை கைதுசெய்யப்பட்டார்.

கஜேந்திரகுமாரைக் கைதுசெய்வதற்காக பொலிஸார் அவரது இல்லத்துக்கு இன்று காலை 6.30 மணியளவில் சென்றனர்.

இந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில், சபாநாயகருக்கு அறிவித்ததாகவும், அது தொடர்பில், பொலிஸ் மா அதிபருக்கு தாம் அறிவிப்பதாக சபாநாயகர் கூறியதாகவும், கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்தச் சந்தர்ப்பத்தில், தமக்கு தெரிவித்ததாக ஹிரு செய்தி வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில் காலை 8.15 அளவில் அவரை பொலிஸார் கைதுசெய்தனர்.

மருதங்கேணி பகுதியில் வைத்து, பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டில், அவர் கைதுசெய்யப்பட்டதாக, பொலிஸ் பேச்சாளர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

மருதங்கேணியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில், நாளை முற்பகல் 10 மணிக்கு, மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு, கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு நேற்று, மதியம் கொள்ளுப்பிட்டி பொலிஸாரால் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில், இன்றைய தினம், நாடாளுமன்றில், சிறப்புரிமை பிரச்சினையை முன்வைக்க கஜேந்திரகுமார் பொன்னம்பலம் திட்டமிட்டிருந்தார்.

இது குறித்து, சபாநாயகருக்கு நேற்று மாலை அறியப்படுத்தி இருந்ததாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்திருந்தார்.

தொடர்பான செய்தி: நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் வெளிநாடு செல்லத் தடை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்