நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திர குமார் வெளிநாடு செல்லத் தடை

🕔 June 6, 2023

நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றம் உத்தரவை பிறப்பித்துள்ளது.

நாடாளுமன்ற உறுப்பினர் ட்விட்டர் மூலம் இதனைத் தெரிவித்துள்ளார்.

பொலிஸ் நிலையத்தில் வாக்குமூலம் வழங்கும் வரை, அவருக்கு எதிராக பயணத்தடை விதிக்குமாறு மருதங்கேணி பொலிஸார் நீதிமன்றில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

இந்த கோரிக்கையை பரிசீலித்த கிளிநொச்சி நீதிவான், பயணத்தடை விதித்து உத்தரவிட்டார்.

இந்த நிலையில், கொழும்பில் உள்ள நாடாளுமன்ற உறுப்பினரின் வீட்டுக்குச் சென்றிருந் கொள்ளுப்பிட்டி பொலிஸார் குறித்த உத்தரவை கையளித்தனர்.

அதன்படி, எதிர்வரும் 08 ஆம் திகதி காலை 10 மணிக்கு மருதங்கேணி பொலிஸ் நிலையத்தில் முன்னிலையாகுமாறு பொலிஸார் அறிவுறுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் ட்விட்டரின் குறிப்பிட்டுள்ளார்.

மருதங்கேணி பொலிஸ் நிலையத்துக்கு இன்று (06) வருமாறு முன்னதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.

கடந்த 03ஆம் திகதி இடம்பெற்ற சம்பவம் தொடர்பான இந்த அழைப்பு தொடர்பில் சபாநாயகருடன் கலந்துரையாடிய பின்னரே தீர்மானம் ஒன்றை எட்டவுள்ளதாக தமிழ் மக்கள் தேசிய முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக தான் கொழும்புக்கு வந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் மருதங்கேணி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அறிவித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அண்மையில் மருதங்கேணி விளையாட்டுக்கழக உறுப்பினர்களுடன் நாடாளுமன்ற உறுப்பினர் கலந்துரையாடிக் கொண்டிருந்தபோது, அங்கு வந்திருந்த புலனாய்வுப் பிரிவினர் எனக் கூறப்படுவோருடனும், பொலிஸாருடனும் ஏற்பட்ட வாக்குவாதம் தொடர்பில், கஜேந்திரக் குமாருக்கு எதிராக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்