கிழக்கு கல்வியல் கல்லூரி ஆசிரியர்களுக்கு கிழக்கிலேயே நியமனம்: தவறைத் திருத்தவுள்ளதாக கல்வியமைச்சர் உறுதி

🕔 June 5, 2023

– நூருல் ஹுதா உமர் –

கிழக்கு மாகாணத்துக்கு வெளியே நியமனம் செய்யப்பட்ட – கிழக்கு மாகாண கல்வியற்கல்லூரி ஆசிரியர்களை, கிழக்கு மாகாணத்தில் நியமிக்கத் தேவையான நடவடிக்கைகளை தான் எடுக்க தயாராக உள்ளதாக, கல்வியமைச்சர் சுசில் பிரம ஜயந்த – நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவிடம் தெரிவித்தார்.

கிழக்கு மாகாண கல்வியற்கல்லூரி ஆசிரியர்களுக்கான நியமனம் – கிழக்கு மாகாணத்துக்கு வெளியே வழங்கப்படவுள்ளதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, அந்த ஆசிரியர் நியமனத்தில் உள்ள பிரச்சினைகளுக்கு தீர்வை காணும் நோக்கில் சுற்றாடல் அமைச்சர் இஸட்.ஏ. நஸீர் அஹமட், நாடாளுமன்ற உறுப்பினர்களான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ், எஸ்.எம்.எம். முஷாரப் மற்றும் இசாக் ரஹ்மான் ஆகியோர் கல்வியமைச்சர் சுசில் பிரம ஜெயந்தவை இன்று (05) கல்வியமைச்சில் சந்தித்து கலந்துரையாடிய போதே அவர் இந்த விடயத்தைக் கூறினார்.

கிழக்கு மாகாண கல்வியற்கல்லூரி ஆசிரியர், ஆசிரியைகளை கிழக்கு மாகாணத்திலேயே பணிக்கமர்த்த நியமனம் வழங்க வேண்டும் என்றும், கிழக்கு மாகாண ஆசிரியர்களுக்கு இடம்பெறவுள்ள அநீதி தொடர்பிலும், கிழக்கு மாகாண ஆசிரியர் வெற்றிடம் தொடர்பிலும், கல்வி மேம்பாட்டு வேலைத்திட்டங்கள் குறித்தும் கோரிக்கை முன்வைத்த இந்தக் குழுவினர், துரித கதியில் நடவடிக்கை எடுக்குமாறும் கோரிக்கை முன்வைத்தனர்.

இவற்றைக் கேட்டறிந்த அமைச்சர், ஏற்கனவே நியமன கடிதங்கள் சகல மாகாணங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால் மாகாண ஆளுநர்களிடம் கடிதங்களை மீளப்பெறல் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாகக் குறிப்பிட்டார்.

நாளை மாலை முதற்கட்டமாக ஊவா மாகாண ஆளுநரை அழைத்து பேசவுள்ளதாகவும், இந்த நியமனத்தில் சிறிய தவறுகள் இடம்பெற்றுள்ளதை தான் அறிந்து கொண்டுள்ளதாகவும் கிழக்கு மாகாண கல்வி மேம்பாட்டுக்கு தனது பூரண ஆதரவை எப்போதும் வழங்க தயாராக உள்ளதாவும் குறிப்பிட்டார்.

கிழக்கு மாகாணத்துக்கு வெளியே நியமனம் செய்யப்பட்ட கிழக்கு மாகாண கல்வியற்கல்லூரி ஆசிரியர்களை கிழக்கு மாகாணத்தில் நியமிக்க நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் கூறினார் என, இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்ட எச்.எம்.எம். ஹரீஸ் ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்