அட்டாளைச்சேனையை அச்சுறுத்தும் ‘மோட்டார் சைக்கிள் ஆசாமிகள்’ தொடர்பில் மக்கள் ஆத்திரம்: பெரிய பள்ளிவாசல் நிர்வாகம் கவனத்தில் கொள்ளுமா?

🕔 June 1, 2023

போக்குவரத்துச் சட்டத்தை மீறும் வகையிலும் மக்களை அச்சுறுத்தும் முறையிலும் – மோட்டார் சைக்கிள்களை ஓட்டும் ஆசாமிகளால், அட்டாளைச்சேனை பிரதேசத்தில் அதிக விபத்துக்கள் ஏற்பட்டு வருகின்றன.

இன்று (01) அட்டாளைச்சேனை சந்தைப் பகுதி பிரதான வீதியின் ஒரே இடத்தில் இரண்டு விபத்துக்கள் நடந்தன.

துவிச்சக்கர வண்டியில் பயணிந்த இளைஞர் ஒருவரை – மோட்டார் சைக்கிளில் தலைக் கவசங்கள் இன்றி பயணித்தவர்கள் – மோதிக் காயப்படுத்தி விட்டு, மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் தப்பியோடி விட்டனர்.

இது குறித்து அக்கரைப்பற்று பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்துக்கு போக்குவரத்துப் பொலிஸார் இருவர் சீருடையில் வந்து அங்கு விசாரணைகளை மேற்கொண்டார்கள்.

இதன்போது பிரதான வீதியால் தலைக் கவசமின்றி ஒருவர் மோட்டார் சைக்கிளைச் செலுத்தி வந்தமையைக் கண்ட போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர், அந்த மோட்டார் சைக்கிளை நிறுத்த முயற்சித்தார். ஆனால் பொலிஸ் உத்தியோகத்தரை இடித்துத் தள்ளி விட்டு குறித்த மோட்டார் சைக்கிள் வேகமாகச் சென்று விட்டது. இதனால் பொலிஸ் உத்தியோகத்தருக்கு முகத்தில் காயம் ஏற்பட்டது.

அட்டாளைச்சேனைப் பிரதேசத்தில் தலைக் கவசமின்றி – ஒரு மோட்டார் சைக்கிளில் இரண்டு, மூன்று பேர் பயணிப்பதை அடிக்கடி காண முடிகிறது. இவர்கள் அதி வேகமாகவும் மக்களை அச்சுறுத்தும் வகையிலும் மோட்டார் சைக்கிள்களை செலுத்துவது வழமையாகும். 15 தொடக்கம் 22 வயதுக்கு உட்பட்டவர்களே இவ்வாறு போக்குவரத்து சட்டத்தை மீறி மோட்டார் சைக்கிள்களை செலுத்துவதையும் அவதானிக்கலாம்.

இப்படியானவர்களால் பாதையில் பயணிக்கும் சாதாரண பொதுமக்கள் விபத்துக்குள்ளாகி வருகின்றனர். கடந்த ஓரிரு மாதங்களில் அட்டாளைச்சேனை சந்தைப் பகுதியில் இவ்வாறானவர்களால் பல விபத்துக்கள் ஏற்பட்டிருக்கின்றன.

மறுபுறமாக இந்த மோட்டார் சைக்கிள் ஆசாமிகள் – பெண்கள் பாடசாலைகள் கலையும் நேரங்களில், பாடசாலையைச் சுற்றி மோட்டார் சைக்கிள்களில் நிற்பதும், பெண் மாணவியரைப் பின் தொடர்வதும் வழமையாக மாறியுள்ளது. இதனால் பெண் பிள்ளைகள் பெரும் பிரச்சினைகளை எதிர் கொள்கின்றனர்.

இவ் விடயங்கள் தொடர்பில் பொதுமக்கள் தங்கள் ஆத்திரத்தையும், அதிருப்திகளையும் வெளிப்படுத்துகின்றபோதும், இதற்கு முறையான தீர்வினைக் காணும் வகையில் எவ்வித நடவடிக்கைகளும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

எனவே, இவ்விவகாரம் தொடர்பில் உடனடியாக அட்டாளைச்சேனை பெரிய பள்ளி நிர்வாகத்தினர் கவனமெடுக்க வேண்டுமென்கிற கோரிக்கை எழுந்துள்ளது. அக்கரைப்பற்று பொலிஸாரையும் அழைத்து இது தொடர்பில் கலந்தாலோசனைக் கூட்டமொன்றை பெரிய பள்ளி நிர்வாகம் உடனடியாக நடத்த வேண்டும் என மக்கள் கூறுகின்றனர்.

குறிப்பாக, அட்டாளைச்சேனையில் பாடசாலைகள் கலையும் நேரங்களில் பாடசாலைகளை அண்மித்த வீதிகளிலும், இரவு 07 மணி தொடக்கம் 10 மணி வரையில் – பிரதான வீதியிலும் பொலிஸாரும், வீதிப் போக்குவரத்துப் பொலிஸாரும் கடமையில் ஈடுபட வேண்டுமென பெரிய பள்ளிவாசல் நிருவாகத்தினர் இதன்போது கோரிக்கை முன்வைத்து இதற்கான தீர்வினை பெற முயற்சிக்க வேண்டும்.

மேற்படி மோட்டார் சைக்கிள் ஆசாமிகளால் உயிர் பலிகள் ஏற்படுவதற்கு முன்னர், இதற்கு முடிவு கட்டப்பட வேண்டியது அவசியமாகும்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்