‘ஒரேயொரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி’ எனும் பெருமை ரணிலுக்கு கிடைத்தது

🕔 May 29, 2023

ரலாற்றுச் சிறப்புமிக்க மஹியங்கனை விகாரை வளாகத்தை புன்னியஸ்தலமாக பிரகடனப்படுத்தும் ஸ்ரீ சன்னஸ் பத்திரத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கையளித்தார்.

மகாவிஹார வங்சிக்க ஷ்யாமோபாலி மஹா நிகாயவின் அஸ்கிரி தரப்பின் சிரேஷ்ட காரக சங்க உறுப்பினர், வரலாற்றுச் சிறப்புமிக்க மஹியங்கனை ரஜமஹா விகாரையின் விஹாராதிபதி மஹோபாத்யாய உருலேவத்தே தம்மரக்கித்த தேரரிடம் மேற்படி பத்திரம் கையளிக்கப்பட்டது.

வரலாற்றுச் சிறப்புமிக்க மஹியங்கனை விகாரையின் புனரமைப்புப் பணிகளில் பங்கேற்ற சுதந்திர இலங்கையின் முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி என்ற வகையில், நேற்று (28) பிற்பகல் மஹியங்கனை விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, விஹாராதிபதி உருலேவத்தே தம்மசித்தி தேரரை சந்தித்து ஆசி பெற்றார்.

பின்னர் விகாரையில் மத அனுஷ்டானங்களில் ஈடுபட்டார்.

மெத் சவிய ஸ்தாபகர் வானியலாளர், கொழும்பு பல்கலைக்கழக பௌதீகவியல் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தலைமையில் ‘மெத் சவிய மனநலக் கற்கை கருணைச் சங்கத்தின்’ மூலம் வில்லுவ குளத்தின் நடுவில் நிர்மாணிக்கப்பட்ட சுமார் 102 அடி உயரமுடைய புத்தர் சிலை திறந்து வைக்கும் முகமாக நினைவுப் பலகையை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திறைநீக்கம் செய்தார்.

இந்த நிகழ்வில் மஹியங்கனை ரஜமஹா விகாராதிபதி மஹோபாத்யாய உருலேவத்தே தம்மரக்கித தேரர், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு நன்றியுணர்வாக நினைவுச் சின்னம் ஒன்றை வழங்கி வைத்தார்.

இப்புனித நிகழ்வில் வரவேற்புரை நிகழ்த்திய மஹியங்கனை ரஜமஹா விகாராதிபதி , வரலாற்றுச் சிறப்புமிக்க மஹியங்கனை புனித பூமியின் புனரமைப்புப் பணிகளில் இணைந்து கொண்ட ஒரே ஒரு நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மாத்திரமே என்று தெரிவித்தார்.

மகாசங்கத்தினர், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, அமைச்சர்களான விஜயதாச ராஜபக்ஷ, நிமல் சிறிபால டி சில்வா, விதுர விக்ரமநாயக்க, ராஜாங்க அமைச்சர் தேனுக விதானகமகே, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, ஊவா மாகாண ஆளுநர் ஏ.ஜே.எம். முஸம்மில், இலங்கைக்கான வியட்நாம் தூதுவர் திருமதி ஹோ தி தன் ட்ரூக் (Ho Thi Thanh Truc ), வேடுவத் தலைவர் உருவரிகே வன்னிலெத்தோ, வரலாற்று சிறப்புமிக்க தலதா மாளிகையின் தியவடன நிலமே பிரதீப் நிலங்க தேல, பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் ஷவேந்திர சில்வா, பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன மற்றும் பாதுகாப்புப் படைகளின் பிரதிநிதிகள் உள்ளிட்ட அதிதிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

(ஜனாதிபதி ஊடகப் பிரிவு)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்