550 குழந்தைகளுக்கு தந்தையான 41 வயது நபர்: இனி வேண்டாம் என நீதிமன்றம் தடை

🕔 April 29, 2023

விந்தணு தானம் மூலம் 550க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தந்தையாகியதாக சந்தேகிக்கப்படும் நெதர்லாந்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு மேலும் விந்தணு தானம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

41 வயதான ஜோனத்தான், தடையை மீறி மீண்டும் விந்தணுவை தானம் செய்ய முயன்றால் அவருக்கு இலங்கை மதிப்பில் சுமார் 03 கோடியே 15 லட்சம் ரூபா அபராதம் விதிக்கப்படலாம்.

அவர் ஏற்கனவே விந்தணு தானம் மூலம் 100க்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு தந்தையானது தெரியவந்ததையடுத்து, கடந்த 2017ல் நெதர்லாந்தில் உள்ள கருவுறுதல் கிளினிக்குகளுக்கு அவர் விந்தணுக்களை தானம் வழங்க தடை விதிக்கப்பட்டது.

எனினும், விந்தணுக்களை தானம் செய்வதை நிறுத்துவதற்கு பதிலாக, வெளிநாட்டிலும், ஆன்லைன் மூலமாகவும் அவர் தனது விந்தணுக்களை தானம் செய்து வந்துள்ளார்.

விந்தணுக்களை அழிக்க நீதிமன்றம் உத்தரவு

ஹேக்கில் உள்ள நீதிமன்றம், அவர் எந்தெந்த கிளினிக்குகளுக்கு விந்தணுக்களை தானமாக வழங்கினார் என்ற பட்டியலை வழங்கும்படியும், அவர் தானமாக வழங்கிய விந்தணுக்களை அழிக்கும்படியும் உத்தரவிட்டுள்ளது.

நூற்றுக்கணக்கான பெண்களை ஜோனத்தான் தவறாக வழிநடத்தியதாகவும் கூறப்படுகிறது.

விந்தணுக்களை தானமாக வழங்கும் நபர், 12 குடும்பங்களில் 25 குழந்தைகளுக்கு மேல் தந்தையாகக் கூடாது என்று டச்சு மருத்துவ வழிகாட்டுதல்கள் கூறுகின்றன.

ஆனால், 2007ல் விந்தணு தானத்தை தொடங்கிய ஜோனத்தான், இதுவரை 550 முதல் 600 குழந்தைகள் பிறப்பதற்கு உதவி செய்துள்ளதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.

விந்தணு, கருமுட்டை தானம் மூலம் பிறக்கும் குழந்தைகளின் உரிமைகளை பாதுகாக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள ஒரு அறக்கட்டளை மற்றும் ஜோனத்தான் தானமாக வழங்கிய விந்தணு மூலம் பிறந்த ஒரு குழந்தையின் தாய் ஆகியோர் அவர் மீது புகார் அளித்ததன் அடிப்படையில் அவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார்.

அவர் தானமாக வழங்கிய விந்தணு மூலம் நெதர்லாந்து நாட்டில் மட்டும் 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்துள்ளன. இதேபோல், அந்நாட்டில் உள்ள ஒருசில கிளினிக்குகள் அவரின் விந்தணுக்களை வெளிநாடுகளுக்கும் அனுப்பியுள்ளன.

ஜோனத்தான் புதிதாக யாருக்கும் தனது விந்தணுக்களை தானம் செய்வதற்கு நீதிமன்றம் தடை விதிப்பதாக நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதேபோல், விந்தணுக்களை தானம் செய்வதாக கூறி குழந்தைகளை பெற்றுக்கொள்ள விரும்பும் யாரையும் – அவர் தொடர்புகொள்ளக் கூடாது என்றும் விளம்பரம் செய்யக் கூடாது என்றும் நீதிபதி கூறியுள்ளார்.

அவர் ஏற்கனவே எத்தனை குழந்தைகளுக்கு தந்தையானார் என்பது குறித்து – விந்தணு தானம் பெற்ற நபர்களிடம் தவறான கணக்குகளை கூறி, ஜோனத்தான் ஏமாற்றியுள்ளார் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

விந்தணு தானம் மூலம் பிறக்கும் குழந்தைகள், வளர்ந்து எதிர்காலத்தில் ஒருவரை ஒருவர் (உடன்பிறப்புகளுக்குள்) திருமணம் செய்துகொண்டு குழந்தைகள் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை குறைக்கும் விதமாக, விந்தணு தானம் செய்பவர்கள் குறைந்த அளவிலேயே தானம் வழங்க வேண்டும் என்று கூறப்பட்டு வருகிறது.

நெதர்லாந்து கடந்த காலங்களில் கருவுறுதல் மோசடிகளை பலமுறை எதிர்கொண்டுள்ளது. 2019ஆம் ஆண்டு, ஒரு மருத்துவர் – பெற்றோரின் அனுமதியை பெறாமலேயே தனது விந்தணுவைப் பயன்படுத்தினார் என்பதும் இதன் மூலம் அவர் 49 குழந்தைகளுக்கு தந்தையானார் என்பதும் உறுதி செய்யப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்