குணமடைந்த பின்னரும் வைத்தியசாலையில் தங்கியிருப்போரின் தொகை அதிகரிப்பு: வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறு கோரிக்கை

🕔 April 18, 2023

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று குணமடைந்த பின்னரும் அதிகளவானோர் தங்கியிருப்பதால், நாளாந்த வைத்தியசாலை நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தினமும் சுமார் ஐந்து பேர் குணமடைகின்ற போதிலும் – வைத்தியசாலையில் தங்கியிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதனால், மருத்துவமனை நிர்வாகத்துக்கு – மேலதிக செலவு செய்ய வேண்டி ஏற்பட்டுள்ளதாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷன் பெல்லென கூறியுள்ளார்.

“அம்பியுலன்ஸ் ஊடாக பலர் சிகிச்சைகளுக்காக அழைத்து வரப்படுகின்றனர். அவர்கள் சிகிச்சைகளின் பின்னர் குணமடைந்திருப்பினும், பொறுப்பேற்க எவரும் வருவதில்லை. அவர்களில் பெரும்பாலானோர் வயோதிபர்களாவர். குணமடைந்த சிலருக்கு வீடு செல்வதற்கான வழி தெரியவில்லை”.

“அவ்வாறு வைத்தியசாலையில் உறவினர்கள் எவரேனும் தங்கியிருப்பின் அவர்களை வீட்டுக்கு அழைத்துச் செல்ல ஏற்பாடு செய்யுமாறு” பிரதி பணிப்பாளர் கோரிக்கை விடுத்துள்ளார்.

“நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்க வேண்டியது மருத்துவமனையின் பொறுப்பாகும். குணமடைந்ததன் பின்னர் அது தொடர்பான பொறுப்புக்கூறலை ஏற்க வேண்டியது சமூக பாதுகாப்பு அமைச்சுக்குரியதாகும்” எனவும் கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிரதி பணிப்பாளர் வைத்தியர் ருக்ஷன் பெல்லென குறிப்பிட்டார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலை, கொழும்பு தெற்கு போதனா வைத்தியசாலை உட்பட மேலும் பல முக்கிய வைத்தியசாலைகளிலும் இந்த நிலை காணப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்