‘இது’ நடக்காது விட்டால் சீனாவுக்கு குரங்குகளை வழங்க முடியாது: விவசாய அமைச்சர் தெளிவுபடுத்தினார்

🕔 April 17, 2023

மைச்சரவையின் அனுமதியின் பேரில் நியமிக்கப்பட்ட குழு பரிந்துரைத்தால் மாத்திரமே சீனாவுக்கு குரங்குகளை வழங்க முடியும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

சீனாவில் சுமார் 1,000 தனியார் மிருகக்காட்சிசாலைகளை நடத்தி வரும் சீன நிறுவனமொன்று, தமது மிருகக்காட்சிசாலைகளுக்காக இலங்கை குரங்குகளை கோரியுள்ளதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் இருந்து குரங்குகளை வழங்குமாறு சீனா கோரிய போதிலும், அது தொடர்பில் அரசாங்கம் இன்னும் இறுதித் தீர்மானத்திற்கு வரவில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வனஜீவராசிகள் திணைக்களம், தேசிய விலங்கியல் பூங்கா திணைக்களம், சட்டமா அதிபர் திணைக்களம், விவசாய அமைச்சு மற்றும் விவசாயத் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவொன்று – அமைச்சரவையின் அனுமதியின் பேரில் நியமிக்கப்படும் எனவும் அமைச்சர் அமரவீர மேலும் தெரிவித்தார்.

“விவசாய அமைச்சர் என்ற வகையில் நான் இதற்கான அமைச்சரவைப் பத்திரத்தை சமர்ப்பிக்கிறேன். அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட குழுவின் பரிந்துரையின் பேரில் மட்டுமே சீனாவுக்கு குரங்குகள் வழங்கப்படும்” என்றும் அவர் கூறினார்.

குரங்குகளை ஏற்றுமதி செய்ய முடியாது என குழு தீர்மானித்தால், இந்த விவகாரம் அத்தோடு முடிந்து விடும் என்றும், எனவே பொய்யாக பீதி அடையத் தேவையில்லை என்றும் அமரவீர கூறினார்.

இதேவேளை, நாட்டிற்குள் குரங்குகளினால் பயிர்ச் செய்கைக்கு ஏற்பட்டுள்ள சேத அச்சுறுத்தல் கொஞ்சநஞ்சமல்ல என குறிப்பிட்ட அமைச்சர், 2022ஆம் ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் குரங்குகள் மற்றும் ராட்சத அணில்களால் 93 மில்லியன் தேங்காய்கள் அழிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

“2022ஆம் ஆண்டின் இறுதியில் 200 மில்லியன் தேங்காய்கள் அழிக்கப்பட்டுள்ளன” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“குரங்குகளால் அறுவடைக்கு ஏற்படும் சேதம் குறித்து விவசாயிகளிடம் கேட்கலாம். இந்த பிரச்சினை நீண்ட காலமாக எந்த தீர்வும் இல்லாமல் உள்ளது”|.

“இந்த விலங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்வதற்கு எதிராக கருத்து தெரிவிப்பவர்கள் இந்த பிரச்சினைக்கு எந்த மாற்று தீர்வையும் வழங்கவில்லை”.

“இதன்மூலம், இந்த விவகாரம் திறந்த மனதுடன் விவாதிக்கப்பட வேண்டிய விஷயமாக மாறியுள்ளது” என்றும் அவர் எடுத்துரைத்தார்.

இருந்தபோதிலும் விலங்குகள் நலச்சட்டமூலத்தை தயாரிப்பதில் பங்களிப்பை வழங்கிய கால்நடை வைத்தியர் சமித் நாணயக்கார, குரங்குகள் பயிர்ச் செய்கைகளை சேதப்படுத்தும் இந்த உண்மையான பிரச்சினைக்கு மனிதாபிமான தீர்வுகள் இருப்பதாகக் கூறுகிறார்.

தொடர்பான செய்தி: வாழ்விடமே இல்லாமல் போன ‘தொங்கு மான்’: ஒரு தேசத்தால் கைவிடப்படும் விலங்கினத்தின் கதை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்