கடலில் மிதந்து வந்த நாலரை கிலோகிராம் ‘ஐஸ்’: கடற்படையினரிடம் சிக்கியது

🕔 April 3, 2023

டலில் மிதந்து வந்த பெருந்தொகை ‘ஐஸ்’ போதைப்பொருள் நேற்று (02) கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.

தலைமன்னார் – மணல்மேடு கடற்பரப்பில் மிதந்த 67 மில்லியன் ரூபாவுக்கும் அதிகம் பெறுமதியான போதைப் பொருளே இவ்வாறு கைப்பற்றப்பட்டது.

தலைமன்னார் பகுதியை அண்மித்த கடற்பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போதே, குறித்த ‘ஐஸ்’ போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகத்துக்கிடமான வகையில் நீரில் மூழ்கியிருந்த சாக்கு மூட்டையை கடற்படையினர் மீட்டபோது, அதில் அடைக்கப்பட்டிருந்த 04 பொதிகளில் சுமார் 04 கிலோ 500 கிராம் (ஈரமான எடை) எடையுள்ள போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் கடற்படையினரின் தொடர்ச்சியான நடவடிக்கைகள் காரணமாக கடத்தல்காரர்கள் போதைப்பொருட்களை கரைக்கு கொண்டு வர முடியாமல் கைவிட்டு சென்றிருக்கலாம் என கடற்படையினர் சந்தேகிக்கின்றனர்.

மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சமர்ப்பிக்கப்படும் வரை, கைப்பற்றப்பட்ட ஐஸ் போதைப்பொருள் – தமது கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டுள்ளதாக கடற்படை மேலும் தெரிவித்துள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்