மிஹின் லங்கா நிறுவனத்தில் இடம்பெற்ற மோசடி வழக்கிலிருந்து சஜின்வாஸ் விடுவிப்பு

🕔 March 29, 2023

முன்னாள் அமைச்சர் சஜின் வாஸ் குணவர்தன, அரசுக்கு சொந்தமான மிஹின் லங்கா நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியாக கடமையாற்றிய போது, சுமார் 883 மில்லியன் ரூபா ஊழல் மோசடி நடைபெற்றமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.

லஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் தொடரப்பட்ட வழக்கில் இருந்து, கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று இவரை விடுக்க உத்தரவிட்டுள்ளது.

மிஹின் லங்கா நிறுவனத்துக்கான கருவிகளை கொள்வனவு செய்யும் போது, சஜின் வாஸ் குணவர்தன – சிங்கப்பூர் நிறுவனத்துடன் சட்டவிரோத ஒப்பந்தத்தில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

சஜின்வாஸ் சார்பில் ஆஜரான சட்டத்தரணி சவேந்திர பெர்னாண்டோ, வழக்கொன்றில் இருந்து விடுவிக்கப்பட்ட சந்தேகநபர் மீது, அதே குற்றத்துக்காக மற்றுமொரு நீதிமன்றில் குற்றம் சுமத்த முடியாது என முன்னதாக ஆரம்ப ஆட்சேபனையினை தாக்கல் செய்திருந்தார்.

இவ்வழக்கு தொடர்பாக, கொழும்பு நீதவான் நீதிமன்றத்தினால் தனது கட்சிக்காரர் முன்னர் விடுவிக்கப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டிய அவர், தனது கட்சிக்காரருக்கு எதிராக மீண்டும் ஒருமுறை மேல் நீதிமன்றத்தில் பிழையான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளதாக கூறினார்.

இதே குற்றச்சாட்டில் சஜின்வாஸ் குணவர்தனவுக்கு எதிராக குற்றச்சாட்டை முன்வைக்க சட்டத்தில் இடமில்லை என்பதால், இது சட்டத்துக்கு முரணானது என சட்டத்தரணி சவேந்திர பெர்னாண்டோ தெரிவித்தார்.

இந்த வாதங்களைக் கருத்திற்கொண்ட மேல் நீதிமன்ற நீதிபதி தமித் தொட்டாவத்த, சஜின் வாஸ் குணவர்தனவை வழக்கில் இருந்து விடுவித்தார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்