கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு இன்றைய தினத்துக்குள் கணக்காளரை நியமிக்க வேண்டும்: சாணக்கியன் நாடாளுமன்றில் எச்சரிக்கை

🕔 March 7, 2023

ல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு இன்றைய தினத்துக்குள் (07) கணக்காளரை நியமிக்க வேண்டும் என்றும், அவ்வாறு நியமிக்கப்படவில்லை என்றால் – பொது நிர்வாக அமைச்சருக்கு எதிராக நடவடிக்கை எடுப்போம் எனவும் – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ரா. சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று(செவ்வாய்கிழமை) உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்;

“கல்முனை வடக்கு பிரதேச செயலகம் என்பது 1993ஆம் ஆண்டு வர்த்தமானி ஊடாக பிரதேச செயலகமாக அறிவிக்கப்பட்டது. இதற்கு கணக்காளர் இல்லை என்று சொல்வதோ அல்லது நியமிக்கப்படவில்லை என்று சொல்லுவதோ அலட்சியமான பதில்.

இலங்கையில் பிரதேச செயலகம் ஒன்றுக்கு கணக்காளர் தேவையில்லை என்று நீங்கள் எவ்வாறு கூறலாம். இது முற்றுமுழுதாக ஒரு தவறான விடயம். பொது நிர்வாக அமைச்சினுடைய செயல்பாடுகள் மிகவும் மோசமாகவுள்ளன.

மட்டக்களப்பு மாவட்டத்தினை பொறுத்தவரையில் பிரதேச அபிவிருத்திக்குழு கூட்டங்களை நடத்துவது இல்லை. மாவட்ட அபிவிருத்திக்குழு கூட்டங்களில் எடுக்கப்படாத பல தீர்மானங்களை, மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவர் செயற்படுத்துகின்றார்.

உங்களுடைய (பொது நிர்வாக அமைச்சர்) பகுதியிலுள்ள பிரதேச செயலகத்துக்கு கணக்காய்வாளர் இல்லை என்றால் அது தேவையில்லாத விடயம் என நீங்கள் கூறுவீர்களா. 29 கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கிய ஒரு பிரதேச செயலகத்தில் நிதியினை கையாள முடியாத ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு கணக்காளரை நியமிக்குமாறு ஜனாதிபதி உத்தரவிட்டார். ஆனால் இதுவரை நியமிக்கப்படவில்லை.

தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் ஒரு இரவில் இதனை செயற்படுத்துவோம் என்று நாமல் ராஜபக்ஷ ஒரு தடவை தெரிவித்தார். அதேபோன்று ராஜாங்க அமைச்சர்களான வியாழேந்திரன், பிள்ளையான் போன்றவர்கள் – கணக்காய்வாளரை நியமிக்காவிட்டால் நிர்வாகத்தினை முடக்குவோம் என்று கூறினர். ஆனால் இன்று அவர்கள் அமைதியாக இருக்கின்றார்கள். அதேபோன்று கருணா அம்மானும் இதுகுறித்து பேசினார் ஆனால் இதுவரை எதுவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இன்றைய தினத்துக்குள் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கு கணக்காளரை நியமிக்க வேண்டும். அவ்வாறு நியமிக்கப்படவில்லை என்றால் உங்களுக்கு (பொது நிர்வாக அமைச்சருக்கு) எதிராக நடவடிக்கை எடுப்போம்” என்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்