மூன்று நாட்கள் ஓய்வெடுக்க சஷி வீரவன்சவுக்கு நீதிமன்றம் அனுமதி

🕔 February 24, 2023

முன்னாள் அமைச்சர் விமல் வீரவங்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், மூன்று நாட்கள் படுக்கையில் ஓய்வெடுக்க (bed rest) கொழும்பு பிரதம நீதவான் பிரசன்ன அல்விஸ் இன்று (24) அனுமதி வழங்கியுள்ளார்.

மேலும் அவருக்கு எதிரான வழக்கை பெப்ரவரி 28ம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார்.

ராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளும் பொருட்டு, போலி ஆவணங்களை சமர்ப்பித்தார் என – சஷி வீரவன்சவுக்கு எதிராக, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த நிலையில் சஷி வீரவன்சவுக்கு ஏற்பட்டுள்ள சுகவீனம் காரணமாக வழக்கை மற்றொரு திகதிக்கு ஒத்திவைப்பதற்கு, அரசு தரப்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் திலீபா பீரிஸ் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

ராஜதந்திர கடவுச்சீட்டை பெற்றுக்கொள்வதற்காக போலியான ஆவணங்களை குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுப்பாட்டாளருக்கு அனுப்பி வைத்த குற்றச்சாட்டின் பேரில், சஷி வீரவன்சவுக்கு எதிராக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இந்த வழக்கை தாக்கல் செய்தனர்.

முன்னதாக ஒரு வழக்கில், போலியான கடவுச் சீட்டு வைத்திருந்த குற்றச்சாட்டில் – சசி வீரவன்சவுக்கு இரண்டு வருட கடூழிய சிறைத்தண்டனையுடன் 100,000 ரூபா அபராதமும் விதிக்கப்பட்டமை குறிப்பிடப்பிடத்தக்கது.

இருந்தபோதிலும், அந்தத் தீர்ப்புக்கு எதிராக சசி வீரவன்ச கொழும்பு மேல் நீதிமன்றில் மேன்முறையீடு செய்திருந்த நிலையில், அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்