அம்பாறை மாவட்டத்தில் நெல் கொள்வனவு ஒரு வாரத்துக்குள் ஆரம்பமாகும்; அரசாங்க அதிபர் கூறியதாக, ஐ.ம.சக்தி அமைப்பாளர் புகாரி தெரிவிப்பு

🕔 February 15, 2023

– அஹமட் –

விவசாயிகளிடமிருந்து நெல் கொள்வனவு செய்யப்படவுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ள நிலையில், அம்பாறை மாவட்டத்தில் அந்த நடவடிக்கை – ஒரு வாரத்துக்குள் மேற்கொள்ளப்படும் என, அரசாங்க அதிபர் ஜே.எம்.ஏ. டக்ளஸ் தன்னிடம் கூறியதாக, சாகாமம் நெற்காணிகள் சம்மேளனத் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் அம்பாறை மாவட்ட அமைப்பாளருமான எம்.ஐ. ஏ. புகாரி தெரிவித்தார்.

அம்பாறை மாவட்டத்தில் நெல் கொள்வனவு எப்போது நடைபெறும் என, விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீரவை – தான் தொடர்பு கொண்டு கேட்டதாகவும், அதற்கு – அரசாங்க அதிபருக்கு நிதி அனுப்பப்பட்டு விட்டதாக அமைச்சர் பதிலளித்ததாகவும் புகாரி கூறினார்.

இதனையடுத்து அம்பாறை மாவட்ட அரசாங்க அதிபரை தொடர்பு கொண்டு – தான் விசாரித்தபோதே, ஒரு வாரத்துக்குள் நெல் கொள்வனவு செய்யும் நடவடிக்கை ஆரம்பமாகும் என அவர் கூறியதாக புகாரி குறிப்பிட்டார்.

“முன்னதாக அக்கரைப்பற்று பிரதேச செயலாளரிடம் இது விடயமாக கேட்டேன். நெல் கொள்வனவு சம்பந்தமாக சுற்றறிக்கையொன்று மட்டும் அவர்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக பிரதேச செயலாளர் கூறினார்” எனவும், புகாரி தெரிவித்தார்.

அக்கரைப்பற்று மாநகர சபைக்கான தேர்தலில் – ஐக்கிய மக்கள் சக்தியின் முதன்மை வேட்பாளராக புகாரி போட்டியிடுகின்றார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்