கோணாவத்தை ஆற்றை மண்ணிட்டு நிரப்பிய உதுமாலெப்பை: “பழைய நிலைக்கு கொண்டு வருவேன்” என, தேர்தல் வாக்குறுதி வழங்குவாரா?

🕔 February 9, 2023

– மரைக்கார் –

ட்டாளைச்சேனை – கோணாவத்தை ஆற்றின் குறுக்காக அமைந்துள்ள பெரிய பாலம் பகுதியில், ஆற்றின் பெரும் பகுதியை சட்ட விரோதமாக மண்ணிட்டு நிரப்புவதற்கு காரணமாக இருந்த கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, தற்போது அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் போட்டியிடுகின்றார். இந்த நிலையில், அவர் அட்டாளைச்சேனையின் தவிசாளராக தெரிவானால்; “நிரப்பப்பட்ட ஆற்றை மீண்டும் தோண்டி – பழைய நிலைக்குக் கொண்டு வருவேன்” என, பகிரங்கமாக வாக்குறுதி வழங்குவாரா என, சமூக ஆர்வலர்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

அட்டாளைச்சேனையில் கோணாவத்தை எனும் ஆறு உள்ளது. இது போன்றதொரு ஆறு – இலங்கையில் எங்கும் இல்லை எனக் கூறப்படுகிறது. ஓர் ஊரின் எல்லையில் தொடங்கி, – மறு எல்லையில் முடிவடையும் வகையில், கிடையாக ஓடும் ஆறாக இந்த ஆறு அமைந்துள்ளது.

சுமார் 04 கிலோமீற்றர் நீளமுடைய இந்த ஆறு, ஆரம்பத்தில் 100 மீற்றர் அகலம் கொண்டதாக இருந்ததாகக் கூறப்படுகிறது. ஆனால், இதன் இரண்டு பக்கங்களும் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டு – மண்ணிட்டு நிரப்பப்பட்டுள்ளதால், இதன் அகலம் படிப்படியாகக் குறைவடைந்து வருகிறது.

ஆற்றை மண்ணிட்டு நிரப்ப காரணமான உதுமாலெப்பை

கிழக்கு மாகாண முன்னாள் அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை அட்டாளைச்சேனையை சொந்த இடமாகக் கொண்டவர். இவரின் வீடு கோணாவத்தை ஆற்றை அண்டி உள்ளது. இவர் தனது வீட்டின் முன்னாலுள்ள இந்த ஆற்றின் கரையோரப் பகுதியை ஆக்கிரமித்து, அங்கு கட்டடங்களை நிர்மாணித்து வைத்துள்ளதோடு, அவர் அமைச்சராக இருந்த காலத்தில், அவரின் வீட்டின் முன்பாக உள்ள ஆற்றின் இரண்டு கரைகளின் எல்லைகளையும் மாற்றியமைத்தார். இதனால் ஆற்றின் அகலம் அங்கு குறைவடைந்தது.

ஆறு மூடப்பட்ட பகுதி – வட்டமிட்டுக் காட்டப்பட்டுள்ளது

அதேவேளை, பல வருடங்களுக்கு முன்னர் அட்டாளைச்சேனை பிரதான வீதியை ‘காபட்’ வீதியாக அமைக்கும் பொருட்டு, வீதியில் இருந்து தோண்டி எடுக்கப்பட்ட மண்ணை – அட்டாளைச்சேனை கோணாவத்தை ஆற்றின் ஒரு பகுதியில் கொட்டி, ஆற்றின் பெரும் பகுதியை நிரப்புவதற்கு – உதுமாலெப்பை காரணமாக இருந்தார். அவரின் அரசியல் அதிகாரத்தைப் பயன்படுத்தி, அதனை அவர் செய்து முடித்தார்.

இப்போது ஆற்றின் மற்றைய பகுதிகள் 150 தொடக்கம் 200 அடியாக உள்ள நிலையில், உதுமாலெப்பையின் அதிகாரத்தைக் கொண்டு நிரப்பப்பட்ட பகுதியில் ஆறு – வெறும் 30 அடி அகலமாக மட்டுமே உள்ளது.

ஆறு – நிரப்பப்பட்டு, தரையாக மாற்றப்பட்டுள்ள பகுதி, தற்போது உதுமாலெப்பையின் அரசியல் தொடர்பான கூட்டங்களை நடத்துவதற்காகவே அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

இந்த கோணாவத்தை ஆறானது, அட்டாளைச்சேனை பிரதேசத்திலுள்ள பல்லாயிரம் ஏக்கர் நெற்செய்கை நிலங்களில் தேங்கும் மேலதிக நீரை – கடலுக்குக் கொண்டு சேர்க்கும் வழியாகப் பயன்படுகிறது.

ஊர் – வெள்ளத்தால் பாதிக்கப்படுவதைத் தடுக்கும் வகையில், மழை காலங்களில் மேலதிக நீரை தாங்கிக் கொள்ளும் தொட்டியாகவும் இது உள்ளது.

இந்த ஆற்றில் பலநூறு பேர் மீன்பிடித்து – தொழில் செய்து வந்தமையும் குறிப்பிடத்தக்கது.

இவ்வாறான ஆற்றினை முன்னாள் அமைச்சர் உதுமாலெப்பை மண்ணிட்டு நிரப்பியமைக்கு எதிராக, பல்வேறு தரப்பினரும் எதிர்க்குரல் எழுப்பியும், அவரின் அரசியல் அதிகாரம் காணரமாக, அப்போது எதுவும் செய்ய முடியவில்லை.

இதனையடுத்து, அட்டாளைச்சேனையின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம். நசீர், அரசியலுக்குள் நுழையும் பொருட்டு அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் 2010ஆம் ஆண்டு போட்டியிட்டார்.

அப்போது அவரிடம் சமூக ஆர்வலர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக, அவர் அப்போது தேர்தல் மேடைகளில் ஒரு வாக்குறுதி வழங்கினார். “அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராக நான் தெரிவானால், உதுமாலெப்பையினால் மண்ணிட்டு நிரப்பப்பட்ட கோணாவத்தை ஆற்றை, மீண்டும் தோண்டி – பழைய நிலைக்குக் கொண்டு வருவேன்” என்பதே அந்த வாக்குறுதியாகும்.

அந்தத் தேர்தலில் நசீர் வெற்றி பெற்று, அட்டாளைச்சேனை பிரதேச சபையின் தவிசாளராகவும் ஆனார். ஆனால் அவரின் வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. கோணாவத்தை ஆற்றினை தோண்டினால், ஆற்றின் கரையோரங்களை சட்டவிரோதமாக ஆக்கிரமித்துள்ள நசீரின் உறவினர்களும் பாதிக்கப்படுவார்கள் எனும் நிலை ஏற்பட்டது. அதனால் அவர் அதனைச் செய்யாமல் தவிர்ந்து கொண்டார்.

பாவத்தை கழுவ ஒரு சந்தர்ப்பம்

இப்போது அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தேர்தலில் எம்.எஸ். உதுமாலெப்பை – முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடுகின்றார். அவர் கோணாவத்தை ஆற்றை நிரப்பியபோது – தேசிய காங்கிரஸ் கட்சியில் இருந்தார்.

எனவே, தனது அரசியல் அதிகாரத்தைக் கொண்டு நிரப்பப்பட்ட கோணாவத்தை ஆற்றை, மீண்டும் தோண்டி – அதனை பழைய நிலைக்கு கொண்டு வர வேண்டிய பொறுப்பு உதுமாலெப்பைக்கே அதிகம் உள்ளது. அதனை அவர் நிறைவேற்றாவிட்டால், அட்டாளைச்சேனையின் பாரிய இயற்கை வளத்தை அழித்த பெரும் பாவம் அவரை விட்டகலாது.

மண்ணிட்டு ஆறு நிரப்பப்பட்ட பகுதி, மஞ்சள் கோட்டினால் காட்டப்பட்டுள்ளது

எனவே, அட்டாளைச்சேனை பிரதேச சபையை முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றி, இந்தத் தேர்தலில் அவரும் வெற்றி பெற்றால், நிச்சயமாக தவிசாளராக உதுமாலெப்பையே தெரிவு செய்யப்படுவார். எனவே, “கோணாவத்தையின் மண்ணிட்டு நிரப்பப்பட்ட பகுதியை தோண்டி, அந்த ஆற்றினை பழைய நிலைக்கு கொண்டு வருவேன்” என, உதுமாலெப்பை பகிரங்கமாக தேர்தல் வாக்குறுதியொன்றினை வழங்க வேண்டும் என்பதே, சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.

இந்த ஆறு – மண்ணிட்டு நிரப்பப்பட்டமைக்கு எதிராக நீதிமன்றில் வழக்கொன்றும் நீண்ட காலத்துக்கு முன்னர் தாக்கல் செய்யப்பட்டமை குறிப்பிடத்கத்கது. அந்த வழக்கு தற்போது கிடப்பில் உள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்