மின்வெட்டு இன்றும் நாளையும் இல்லை: காரணமும் வெளியிடப்பட்டது

🕔 January 30, 2023

மின்வெட்டு இன்றும் (30) நாளையும் (31) அமுல்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபை அறிவித்துள்ளது.

நீர் முகாமைத்துவ செயலகம் நீர்த்தேக்கங்களில் இருந்து நீரைத் திறந்து விடுவதற்கு தீர்மானித்துள்ளதால், மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

நீர்பிடிப்பு பகுதிகளில் கனமழை எதிர்பார்க்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

நீர் முகாமைத்துவ செயலகத்தினால் வெளியிடப்படும் நீர், அடுத்த இரண்டு நாட்களுக்கு போதுமான நீர் மின் உற்பத்திக்கு உதவும் என ஜனக ரத்நாயக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

2023 ஜனவரி 29 அன்று பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு விடுத்த கோரிக்கையை அடுத்து, நீர் முகாமைத்துவ செயலகத்தின் முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்தார்.

க.பொ.த உயர்தரப் பரீட்சைகளின் எஞ்சிய நாட்களுக்கான மின்வெட்டு தொடர்பில் பெப்ரவரி 01ஆம் திகதி புதன்கிழமை தீர்மானம் எடுக்கப்படும் எனவும் ஜனக ரதநாயக்க மேலும் கூறியுள்ளார்.

இதேவேளை, மின்சாரத்துறையில் உள்ள பல அரச அதிகாரிகளுக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு – உச்ச நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.

இலங்கை மின்சார சபையின் தலைவர், இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் மற்றும் எரிசக்தி அமைச்சின் செயலாளர் ஆகியோருக்கு எதிராக இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தற்போது நடைபெற்று வரும் உயர்தரப் பரீட்சைகளின் போது மின்வெட்டு தொடர்பான பரிந்துரைகளுக்கு இணங்கத் தவறியதற்காக பிரதிவாதிகளுக்கு எதிராக மனித உரிமைகள் ஆஐணக்குழுவின் மனு தாக்கல் செய்துள்ளது.

மனித உரிமைகள் ஆணைக்குழுவுடனான சமீபத்திய கலந்துரையாடலின் போது, 2022 பெப்ரவரி 17 ஆம் திகதி பரீட்சைகள் முடியும் வரை -மின்வெட்டுகளை நடைமுறைப்படுத்த மாட்டோம் என மின்துறையின் பிரதிநிதிகள் ஒப்புக்கொண்டனர்.

இருந்த போதிலும், அடுத்த நாட்களில் பல பகுதிகளில் மின்வெட்டு அமுல் செய்யப்பட்டது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்