ஒழுக்காற்று நடவடிக்கைக்காக கட்சிப் பதவிகளிலிருந்து இடைநிறுத்தப்பட்ட ஹரீஸ் எம்.பியை, மீளவும் பிரதித் தலைவராக நியமிக்க தீர்மானம்

🕔 January 28, 2023

முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவராக அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸை மீளவும் நியமிக்கப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கட்சியின் தலைவர் ரஊப் ஹக்கீம் தலைமையில், நேற்று (27) வெள்ளிக்கிழமை – கட்சியின்  தலைமையகத்தில் நடந்த உயர்பீட கூட்டத்தில், நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸை, மீளவும் பிரதித் தலைவராக நியமிப்பதற்கான தீர்மானம் எடுக்கப்பட்டது.

அரசியலமைப்புக்கான 20வது திருத்தம் மற்றும் 2022ம் ஆண்டுக்குரிய வரவு – செலவுத் திட்டப் பிரேரணை ஆகியவற்றுக்கு, கட்சியின் தீர்மானத்திற்கு எதிராக வாக்களித்தமைக்காக, கட்சியின் பிரதித் தலைவர் மற்றும் உயர்பீட உறுப்பினர் பதவிகளிலிருந்து ஹரீஸ் – தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டார்.

இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற கட்சியின் பேராளர் மாநாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸ் கலந்து கொள்ளவில்லை என்பதும், அவருக்கு அந்த மாநாட்டில் எந்தவித பதவிகளும் அறிவிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

மு.காங்கிரஸின் அனைத்துப் பதவிகளிலிருந்தும் ஒழுக்காற்று நடவடிக்கையின் பொருட்டு இடைநிறுத்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீஸுக்கு எதிராக, எவ்வித ஒழுக்காற்று நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படாத நிலையில், அவரை மீண்டும் மு.காங்கிரஸின் பிரதித் தலைவராக நியமிக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, நேற்று நடைபெற்ற உயர்பீடக் கூட்டத்தில், கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லா மற்றும் முன்னாள் மாகாணசபை உறுப்பினர் எம். நயீமுல்லாஹ் ஆகியோாரையும் கட்சியின் பிரதித் தலைவர்களாக நியமிப்பதற்கான தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்