நீதிமன்ற கூண்டில் ஏற மறுத்த மைத்திரி; கண்டித்த நீதவான்: ஈஸ்டர் தின தாக்குதல் வழக்கு விசாரணையில் சம்பவம்

🕔 January 27, 2023

ஸ்டர் தின பயங்கரவாத தாக்குதல் தொடர்பிலான விசாரணையொன்றின் பொருட்டு, கொழும்பு – கோட்டே நீதவான் நீதிமன்றில் இன்று (27) ஆஜரான முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதிவாதி கூண்டில் ஏற மறுத்தமையை, நீதவான் திலின கமகே கண்டித்ததாக தெரியவருகிறது.

இதனை அடுத்து அவர் பிரதிவாதி கூண்டில் ஏறியுள்ளார்.

ஈஸ்டர் பயங்கரவாத தாக்குதலை தடுக்கத் தவறியமை தொடர்பில் அருட்தந்தை சிரில் காமினி உள்ளிட்ட இருவர் தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின் போதே இந்த சம்பம் இடம்பெற்றுள்ளது.

வழக்கு விசாரணையின் போது முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதிவாதி கூண்டில் ஏறாது, அதற்கு வெளியே நின்றதை அவதானித்த முறைப்பாட்டு தரப்பு சட்டத்தரணி ரியென்சி ஹர்சகுலரத்ன நீதிமன்றத்தின் கவனத்திற்கு அதனை கொண்டு சென்றார்.

எனினும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சார்பில் நீதிமன்றில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி பைசர் முஸ்தபா, தமது கட்சிக்காரர் சார்பில் தொடரப்பட்டுள்ள தனிப்பட்ட முறைப்பாட்டுக்கமைய, எதிர்கால செயற்பாடுகளுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் தடை விதித்துள்ளதென தெரிவித்தார்.

எனவே, அவர் சாட்சி கூண்டில் ஏற வேண்டிய அவசியமில்லை என்றும் சட்டத்தரணி கூறியுள்ளார்.

இதனையடுத்து மனுதாரர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றில் பிரதிவாதியான மைத்ரிபால சிறிசேன மீதான வழக்கு நடவடிக்கைகளை தற்காலிகமாக முன்கொண்டு செல்வதில்லை என அறிவித்துள்ள போதும், பிரதிவாதி, கூண்டில் ஏற வேண்டியதில்லை என எந்த இடத்திலும் கூறவில்லை என்று கொழும்பு – கோட்டை நீதவான் திலின கமகே  குறிப்பிட்டார்.

இதனையடுத்து, முன்னாள் ஜனாதிபதி சாட்சிகூண்டில் ஏறியுள்ளார்.

இந்த வழக்கு மீதான விசாரணை மார்ச் 17 ஆம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்