அமைச்சர் டயானா கமகேயின் நாடாளுமன்ற உறுப்புரிமையை ரத்துச் செய்யுமாறு கோரும் மனு: நீதிமன்றம் கால அவகாசம்

🕔 January 26, 2023

ராஜாங்க அமைச்சர் டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை நீக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு தொடர்பில் ஆட்சேபனைகளை தாக்கல் செய்ய – அமைச்சர் டயானா கமகேவுக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று (26) கால அவகாசம் வழங்கியுள்ளது.

டயானா கமகேவின் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ரத்துச் செய்யுமாறு கோரி, சமூக ஆர்வலர் ஓஷல ஹேரத் தாக்கல் செய்த மனு, சோபித ராஜகருணா மற்றும் தம்மிக்க கணேபொல ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்ற குழு முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

வழக்கு தொடர்பான ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கு முன்னர், குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளரிடம் சில ஆவணங்களை பெற்றுக்கொள்ள வேண்டுமென டயானா கமகே சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சவீந்திர பெனாண்டோ நீதிமன்றில் கோரிக்கை விடுத்ததுள்ளார்.

ஆவணங்களைப் பெற்றுக் கொண்டு உரிய ஆட்சேபனைகளை சமர்ப்பிப்பதற்கான திகதியை வழங்குமாறு அவர் நீதிமன்றில் கோரினார்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், டயானா கமகே தரப்புக்கு ஆட்சேபனைகளை சமர்ப்பிக்க பெப்ரவரி 17 வரை கால அவகாசம் வழங்கினர்.

டயானா கமகே பிரித்தானிய பிரஜை என்பதால், இந்த நாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை வகிக்க அரசியலமைப்பின் கீழ் அவருக்கு சட்டபூர்வ உரிமை இல்லை என – மனுதாரர் ஓஷால ஹேரத் தெரிவித்துள்ளார்.

எனவே, அவரது உறுப்புரிமையை ரத்து செய்யுமாறு உத்தரவு பிறப்பிக்க வேண்டுமென, அவர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்