இந்தியா, பாகிஸ்தானில் இருந்து முட்டை இறக்குமதி செய்வதில்லை: காரணத்தையும் அரசு வெளியிட்டது

பறவைக் காய்ச்சல் பரவி வருவதால் – இந்தியா மற்றும் பாகிஸ்தானில் இருந்து முட்டைகளை இறக்குமதி செய்ய பரிந்துரை செய்ய முடியாது என கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் டொக்டர் ஹேமாலி கொத்தலாவல தெரிவித்துள்ளார்.
முட்டைகளை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் விலைமனுக் கோரியுள்ள பின்னணியில், நேற்று (11) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் டொக்டர் ஹேமாலி இதனைக் கூறினார்.
விலைமனுக் கோரப்படுவதற்கு 06 மாதங்களுக்கு முன்னர், பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்படாத நாடுகளில் இருந்து முட்டைகள் இறக்குமதி செய்யப்படும் எனவும் அவர் இதன்போது உறுதியளித்தார்.
“முட்டை, குஞ்சுகள், கோழி இறைச்சி மற்றும் தொடர்புடைய பொருட்களை இறக்குமதி செய்வதற்கான விலைமனுக்களை அறிவித்த திகதிக்கு – குறைந்தது 06 மாதங்களுக்கு முன்னதாக, சம்பந்தப்பபடும் நாடுகள் பறவைக் காய்ச்சலால் பாதிக்கப்படவில்லை என்பதை நாங்கள் உறுதி செய்வோம்” என்றும் அவர் கூறினார்.
இதேவேளை, இலங்கை கால்நடை மருத்துவ சங்கம் மற்றும் அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் என்பன தனியான ஊடகவியலாளர் சந்திப்பில் முட்டைகளை இறக்குமதி செய்வதை தவிர்க்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளன.