‘தேர்தலை ஒத்தி வைக்க சதி’ எனும் குற்றச்சாட்டை நிராகரிப்பதாக, அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவிப்பு

🕔 January 12, 2023

ள்ளூராட்சி சபைத் தேர்தலை ஒத்திவைக்க அரசாங்கமும் பொதுஜன பெரமுன கட்சியும் சதி செய்வதாக, எதிர்க்கட்சிகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டை, நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க நிராகரித்துள்ளார்.

தேர்தலை பிற்போட வேண்டிய தேவை அரசாங்கத்திற்கோ தமது கட்சிக்கோ இல்லை எனவும் அவர் கூறினார்.

எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கு தேவையான ஏற்பாடுகளை வழங்குவது தேர்தல்கள் ஆணைக்குழுவின் பொறுப்பாகும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக அமைச்சுக்களில் கூட நிதி ஒதுக்கீடு குறைக்கப்பட்ட வேளையில், உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை தேர்தல்கள் ஆணைக்குழு கோரியுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

பொதுஜன பெரமுனவின் கம்பஹா மாவட்டத்தின் வேட்பு மனுவில் கையொப்பமிடும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் மேற்கண்ட விடயங்களைத் தெரிவித்தார்.

உடுகம்பலையில் அமைந்துள்ள அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் அலுவலகத்தில் இன்று (12) வேட்புமனு கையொப்பமிடப்பட்டது.

கம்பஹா மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி மன்றங்களின் எண்ணிக்கை 19 ஆகும். இதன்படி 413 வட்டாரங்களுக்கான வேட்புமனுவில் 417 உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள் கையொப்பமிட்டுள்ளனர்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தற்போது 11 மாவட்டங்களுக்கான வேட்பு மனுக்களில் கையெழுத்திட்டுள்ளது. கம்பஹா, மாத்தறை மற்றும் பதுளை மாவட்டங்களில் இன்று வேட்புமனுக்கள் கைச்சாத்திடப்பட்டன. எதிர்வரும் சனிக்கிழமைக்குள் அந்தக் கட்சி தனது வேட்பாளர் நியமனப் பட்டியலை கையொப்பமிட்டு இறுதி செய்யவுள்ளது.

இங்கு பேசியை அமைச்சர் பிரசன்ன மேலும் கூறுகையில்;

“மற்ற அனைத்து அரசியல் கட்சிகளை விடவும் தேர்தலை எதிர்கொள்ளக்கூடிய வலுவான அணி எங்களிடம் உள்ளது. அந்த வேட்பாளர்கள் அனைவரும் கிராமங்களில் பொதுப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

அனுபவமுள்ள, மக்களுக்கு சேவையாற்றிய, உழைத்த ஒரு குழுவினர் இத்தேர்தலில் முன்னிறுத்தப்பட்டுள்ளனர்.

தற்போதைய சூழ்நிலையில் தேர்தலை நடத்துவதா வேண்டாமா என்பதை இந்நாட்டு மக்கள் தீர்மானிப்பார்கள்.

தேர்தலை நடத்துவதற்கு பணம் இல்லை என்பதை அனைவரும் அறிவர். சம்பளம் மற்றும் கொடுப்பனவுகள் இல்லாமல் அரசாங்க ஊழியர்கள் தேர்தலுக்கு தயாராகி வருவதாக கூறப்பட்டது. அதற்கு தேர்தல் ஆணையாளர் பொறுப்பேற்கத் தயாராக இருந்தால், நாங்கள் தேர்தலைச் சந்திக்கத் தயார்.

ஒதுக்கீட்டில் சிக்கல் இருப்பதால், எங்கள் அமைச்சுக்களில் பல நிதிக் குறைப்புக்கள் செலவு குறைப்புக்கள் ஏற்பட்டதன் பின்னணியில் இந்தத் தேர்தலைப் பற்றி பேசுகிறோம்.

தேர்தலுக்குத் தேவையான பணத்தைக் கண்டுபிடிப்பது தேர்தல் ஆணைக்குழுவி பொறுப்பு. கட்சி என்ற வகையில் தேர்தலுக்கு தயாராகி வருகிறோம்” எனவும் அவர் தெரிவித்தார்.

(பிரதீப் அனுர குமார – அமைச்சரின் ஊடக செயலாளர்)

Comments

புதிது பேஸ்புக் பக்கம்