வேட்புமனு திகதி அறிவிப்பு நாளை வெளியாகும்: மார்ச் 15க்கு முன்னர் உள்ளூராட்சி தேர்தல்

🕔 January 3, 2023

ள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் கோரும் வர்த்தமானி அறிவித்தல் நாளை (4) வெளியிடப்படும் எனவும், ஜனவரி 19ஆம் திகதி – மாவட்ட மட்டத்தில் வேட்புமனுக்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரி ஒருவர் நேற்று உறுதிப்படுத்தியுள்ளார்.

மார்ச் 19 ஆம் திகதிக்குள் 340 உள்ளூராட்சி சபைகளை நிறுவுவதற்கு வழிவகை செய்யும் வகையில், மார்ச் 15 ஆம் திகதிக்கு முன்னர் தேர்தல் நடத்தப்படும்.

மாவட்ட தேர்தல் அதிகாரிகளாக செயல்படும் மாவட்ட செயலாளர்கள், 25 மாவட்டங்களில் நாளை வேட்புமனுக்களை ஏற்கும் திகதி குறித்து, வர்த்தமானி அறிவித்தலை வெளியிடுவார்கள்.

உள்ளூராட்சி தேர்தலுக்கு 10 பில்லியன் (1000 கோடி) ரூபா செலவாகும் என்ற யூகங்களை நிராகரித்துள்ள அதேவேளை, 08 பில்லியன் ரூபாவுக்குள் தேர்தல் செலவுகளைக் கட்டுப்படுத்த முடியும் என தேர்தல்ஆணையாளர் தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் உத்தியோகத்தர்களின் தொகையினையும் 02 லட்சத்துக்குள் குறைக்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

எல்பிட்டிய பிரதேச சபை தவிர்ந்த 340 உள்ளூராட்சி சபைகளில் 8,711 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர். உள்ளூராட்சி தேர்தல்கள் 60% வட்டார முறையிலும், 40% விகிதாசார பிரதிநிதித்துவ அடிப்படையிலும் நடைபெறும் என்று தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் புஞ்சிஹேவா மேலும் குறிப்பிட்டுள்ளார்.

அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்கள் நியமனப் பட்டியலில் 25% பெண்களை சேர்க்க வேண்டும். மேலும் இளைஞர்களுக்கு 30% பிரதிநிதித்துவத்திற்கான வாய்ப்பை வழங்க வேண்டும். ஆனால் அது தொடர்பான சட்டம் இதுவரை நிறைவேற்றப்படாததால் – அது கட்டாயமில்லை.

2022 ஆம் ஆண்டுக்கான வாக்காளர் பதிவேட்டில் வாக்களிக்கத் தகுதியுள்ள பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 166,92, 398 ஆகும்.

இது இவ்வாறிருக்க, உள்ளூராட்சி தேர்தல் ஒத்தி வைக்கப்படலாம் எனும் ஊகங்களும் அரசியலரங்கள் அதிகம் உள்ளன.

Comments