அக்கரைப்பற்றில் பாடசாலையொன்றுக்கு நபரொருவரின் மகளின் பெயர்: கிழக்கு மாகாண கல்வி அலுவலகம் கருவாட்டுக் கூடைக்கு சோரம் போயுள்ளதாக குற்றச்சாட்டு

🕔 January 2, 2023

– நூருல் ஹுதா உமர் –

க்கரப்பற்று பள்ளிக் குடியிருப்பில் லீடர் எம்.எச்.எச்.எம். அஸ்ரப் கனிஷ்ட வித்தியாலயம்’ எனும் பெயரில் இருந்த பாடசாலைக்கு, நபரொருவர் தனது மகளின் பெயரைச் சூட்டியுள்ளஅக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. றாஸிக் குற்றஞ்சாட்டினார்.

பிரதேச சபை இடப்பரப்பில் உள்ள பாடசாலைகளை திறத்தல், மூடுதல், ஒன்றிணைத்தல், பெயர் சூட்டல், தரம் உயர்த்தல் என்பன பற்றி – தோதான அதிகாரிகளுக்கு விதப்புரை செய்யும் அதிகாரம், 1987/15ம் இலக்க பிரதேச சபை சட்டம் 19 (ஆ) வின் படி தங்களுக்கு உள்ளதாகவும் இதன்போது அவர் கூறினார்.

இவற்றையெல்லாம் மீறியே ‘லீடர் எம்.எச்.எம்.அஸ்ரப் கனிஷ்ட வித்தியாலயம்’ என்ற பெயரை ‘அஸ்-ஸபா கனிஷ்ட வித்தியாலயம்’ என்று மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அக்கரைப்பற்று – பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள பாடசாலையொன்றுக்கு ‘கமு/அக்/அஸ்-ஸபா கனிஷ்ட வித்தியாலயம்’ என புதிய பெயர் பெயர்மாற்றம செய்யப்பட்டமை, மற்றும் பல சர்ச்சைகள் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு அக்கரைப்பற்று பிரதேச சபை மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசும்போதே, மேற்படி விடயங்களை தவிசாளர் றாஸிக் கூறினார்.

இதில் அக்கரைப்பற்று பிரதேச சபை உப தவிசாளர், உறுப்பினர்கள், பாடசாலை அதிபர்கள், பிரதேச அமைப்புக்கள் மற்றும் பொது நிறுவனங்களின் முக்கியஸ்தர்களும் கலந்துகொண்டனர்.

தவிசாளர் றாஸிக் தொடர்ந்து பேசுகையில்;

“கிழக்கு மாகாண கல்விப் பணிமனையினர் கருவாட்டுக்கூடைக்கும், கஜூ, பெற்றோல் போன்ற பொருட்களுக்கும் சோரம் போய், இந்த விடயத்தில் முறையான நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் ஒருபக்கமாக செயற்பட்டுள்ளார்கள்”.

“இதுவிடயமாக பல தடவை பேசியிருந்தும், நடவடிக்கை எடுக்க கோரியிருந்தும் முறையான பொறுப்புகூறல்களோ அல்லது பதில்களோ இல்லை. அக்கரைப்பற்று வலயக் கல்வி பணிமனையினரும் கிழக்கு மாகாண கல்விப்பணிப்பாளரின் உத்தரவு என்று கூறி கண்களை மூடிக்கொண்டு செயற்படுகிறார்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த ஊடக சந்திப்பில் அக்கரைப்பற்று பிரதேச சபை முன்னாள் உறுப்பினரும், பள்ளிக்குடியிருப்பு ஜும்மா பள்ளிவாசல் செயலாளருமான அபூஸாலி இல்யாஸும் கருத்து வெளியிட்டார்.

“அக்கரைப்பற்று பள்ளிக்குடியிருப்பு பிரதேசத்தில் அமைந்துள்ள கமு/அக்/அஸ்-ஸபா கனிஷ்ட வித்தியாலயம் அந்த பிரதேசத்தில் உள்ள மக்களின் சனத்தொகை பரம்பலுடன் ஒப்பிடுகையில் தேவையில்லாத ஒன்றாக இருந்தாலும் கூட, தலைவர் அஷ்ரபின் பெயரை முன்னிறுத்தி உருவாக்கப்பட்டமையினால் அதனை நாங்கள் பொருந்திக்கொண்டோம்”.

“2015 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அந்த பாடசாலை உருவாக்கப்பட்ட போது ‘லீடர் அஸ்ரப் கனிஷ்ட வித்தியாலயம்’ என்று ஆரம்பிக்கப்பட்டது. பின்னாளில் அப்பாடசாலையின் ஸ்தாபகர் என்று கூறப்படுபவரால் அவரது சிரேஷ்ட புதல்வியின் பெயரான ‘ஸபா’ என்கின்ற பெயர் மாற்றப்பட்டுள்ளது. இது யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது”.

“திருட்டுத்தனமாக ஆவணங்களை தயாரித்து, போலியான ஆவண சமர்ப்பிப்புக்களை கல்வி அமைச்சின் காரியாலயங்களுக்கு வழங்கி, பாடசாலையின் பெயரை மாற்றியுள்ளார். இதனை ஏற்றுக்கொள்ள முடியாது. சேர் றாஸிக் பரீட், பதியுதீன் மஹ்மூத் போன்ற கிழக்குக்கு வெளியே இருந்த முஸ்லிம் அரசியல்தலைவர்களை கௌரவித்த நாங்கள், கிழக்கில் பிறந்து முழு தேசத்திற்கும் தலைமை கொடுத்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரபின் பெயரில் பாடசாலை வைத்திருக்க விரும்புவது தவறா?”.

“பிரதேச செயலக அதிகாரிகளின் உதவியுடன் கிராம அபிவிருத்தி சங்கத்துக்கு உரிய காணியை பாடசாலைக்கு பெயர் மாற்றியுள்ளதாக அறிகின்றோம். மட்டுமன்றி அந்த பாடசாலையின் ஸ்தாபகராக கூறிக்கொள்பவர், தனது மூத்த மக்களின் பெயரை பாடசாலைக்கும், கட்டிடங்களுக்கு தனது ஏனைய மக்களின் பெயரையும் வைத்துக்கொண்டு அடாத்தாக பாடசாலையை நிர்வகிக்கிறார். இது அப்பாடசாலை அதிபருக்கும் தர்மசங்கடத்தை உண்டாக்கியுள்ளது”.

“இந்த பிரதேசத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அதாஉல்லா, கல்வி மேம்பாட்டுக்கு செய்த வேலைத் திட்டங்களை எல்லோரும் அறிவர். 90 மாணவர்கள் மட்டுமே உள்ள இப்பாடசாலைக்கு 14 ஆசிரியர்கள், 03 அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், 02 சிற்றூழியர்கள், நிறைய பௌதீக வளங்களை கல்வி உயரதிகாரிகள் வழங்கியுள்ளனர். இதனால் அண்மையில் உள்ள ஏனைய பாடசாலைகள் பாதிக்கப்படுகின்றன. இந்த முறைகேடான வளப்பங்கீடுகள் தொடர்பில் நாங்கள் உரிய நடவடிக்கை எடுக்கவுள்ளோம். அரச உயர் மட்டங்களுக்கு இந்த பிரச்சினையை கொண்டுசெல்ல தயாராகிவருகின்றோம்”.

“இந்த பாடசாலை உருவாக்கப்பட்ட நாள்முதல் தொடர்ந்தும் அவரேதான் பாடசாலை அபிவிருத்தி நிறைவேற்றுக்குழு உறுப்பினராக இருந்துவருகிறார். இது கல்வியமைச்சின் சுற்றுநிருபத்துக்கும், சட்டத்துக்கும் முரணானது. இவரின் போலியான ஆவணங்கள், அடாத்தான நடவடிக்கைகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க தகவலறியும் சட்டத்தின் மூலம் ஆவணங்களை சேகரித்துள்ளோம். இது விடயமாக பலதடவை மாவட்ட அபிவிருத்தி கூட்டங்களிலும் அதாஉல்லாவும், நாங்களும் பேசியிருக்கிறோம்” எனவும் இங்கு பேசியவர்கள் தெரிவித்தனர்.

Comments