அக்கரைப்பற்றில் போதைப்பொருள் பயன்படுத்துபவரின் திருமணத்துக்கான ஒப்புதலை மறுத்த பள்ளிவாசல்: முடிவு சரியானதா?

🕔 January 1, 2023

– யூ.எல். மப்றூக் (பிபிசி தமிழுக்காக) –

போதைப்பொருள் பாவனையாளர் ஒருவரின் திருமணத்தை இஸ்லாமிய முறைப்படி நடத்துவதற்கான ஒப்புதலை வழங்குவதற்கு முஸ்லிம் பள்ளிவாசல் ஒன்று மறுப்பு தெரிவித்துள்ளது.

அக்கரைப்பற்றில் அமைந்துள்ள ஜும்ஆ பெரிய பள்ளிவாசல், இந்த மறுப்பை வெளியிட்டுள்ளது.

அக்கரைப்பற்றை சேர்ந்த மணமகனின் தந்தை, தனது மகனின் திருமணத்தை (நிக்காஹ்) இஸ்லாமிய முறைப்படி நடத்துவதற்கான அனுமதியைப் பெற்றுக் கொள்வதற்குரிய விண்ணப்பத்தை பள்ளிவாசலுக்கு சமர்ப்பித்திருந்தார்.

இந்த விண்ணப்பத்தைப் பரிசீலித்த பள்ளிவாசல் நிர்வாகம், அதை நிராகரிப்பதாக அறிவித்துள்ளது. அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவரின் கையொப்பத்துடன், விண்ணப்பதாரியான மணமகனின் தந்தைக்கு எழுத்து மூலம் இவ்விடயம் அறிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விண்ணபதாரியின் மகன் (மணமகன்) – போதைப் பொருள் பயன்படுத்துபவர் என்பது, சாட்சிகள் மற்றும் ஆவணங்களுடன் உறுதிப்படுத்தப்பட்டுள்ள காரணத்தால், தம்மிடம் சமர்ப்பிக்கப்பட்ட திருமண அனுமதிக்கான விண்ணப்பத்தை நிராகரிப்பதாக, பள்ளிவாசல் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளது.

மேலும் சம்பந்தப்பட்டவரை போதைப்பொருள் புனர்வாழ்வு மையத்தில் அனுமதித்து, நற்சான்றிதழ் பெற்று – அதை பள்ளிவாசலில் சமர்ப்பிக்குமாறும் விண்ணப்பதாரியை பள்ளிவாசல் நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

அறிக்கையோடு நின்று விடாமல், நடைமுறைப்படுத்தி காட்டியுள்ளோம் – பள்ளிவாசல் தலைவர்

போதைப்பொருள் பாவனைக்கு எதிராகத் தமது பள்ளிவாசல் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ள நிலையிலேயே, இவ்வாறானதொரு தீர்மானத்தை தாம் எடுத்துள்ளதாக அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பள்ளிவாசல் தலைவர் எஸ்.எம். சபீஸ் கூறுகின்றார்.

எஸ்.எம். சபீஸ்

போதைப்பொருள் பாவிப்பவர்களின் திருமணத்தை இஸ்லாமிய முறையில் நடத்துவதற்கான ஒப்புதலை தமது பள்ளிவாசல் வழங்காது என்று, முன்னதாகவே பொதுமக்களுக்கு தாம் அறிவித்துள்ளதாகவும் அவர் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.

“அறிக்கைகள் விடுகின்றவர்களில் பெரும்பாலானோர் அவற்றை நடைமுறைப்படுத்துவதில்லை. ஆனால் நாம் அதைச் செய்து காட்டியுள்ளோம். இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுக்கும் போது, இதனால் பாதிக்கப்படுகின்றவர்கள் மூலம் எமக்கு ஆபத்துக்கள் உள்ளன என்பதையும் அறிவோம். அவற்றையெல்லாம் தாண்டியே, சமூக நலனைக் கருத்தில் கொண்டு, குறித்த நபரின் திருமண விண்ணப்பத்தை நாம் நிராகரித்தோம்” என அவர் குறிப்பிட்டார்.

முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் இஸ்லாமிய முறைப்படி தங்கள் வீட்டுத் திருமணத்தை நடத்தும்பொருட்டு, தங்கள் பகுதியிலுள்ள பள்ளிவாசலின் ஒப்புதலை பெறுவது வழமையாகும்.

ஆனால், திருமணமொன்றை பொதுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்வதற்கு, பள்ளிவாசல் ஒன்றின் ஒப்புதல் அவசியமில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இருந்தபோதும், பள்ளிவாசலின் தீர்மானத்துக்கு மாறாக நடப்பவர்களை, பள்ளிவாசல் ஒதுக்கி வைத்துவிடும். அவ்வாறானவர்களின் வாழ்வில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை இஸ்லாமிய முறைப்படி நடத்துவதற்கு பள்ளிவாசல்கள் மறுத்துவிடுவதுண்டு.

இது இவ்வாறிருக்க, தமது பள்ளிவாசல் எடுத்துள்ள தீர்மானத்துடன் மணமகன் தரப்பினருக்கு உடன்பாடு இல்லை என்றால், அவர்கள் பொதுச்சட்டத்தின் கீழ் அந்தத் திருமணத்தை பதிவு செய்ய முடியும் என்றும், அல்லது வேறு பள்ளிவாசல்கள் – ஒப்புதல் வழங்க முன்வந்தால், அதை அவர்கள் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் சபீஸ் மேலும் கூறினார்.

போதைப்பொருள் பாவனையாளர் ஒருவரின் திருமணத்துக்கான ஒப்புதலை பள்ளிவாசலொன்று வழங்க மறுத்தமை, தான் அறிந்தவரையில் இதுவே இலங்கையில் முதல் தடவை எனவும் அவர் குறிப்பிட்டார்.

“குறித்த திருமணத்துக்காக விண்ணப்பித்த மணமகனுக்கு 21 வயது. மணமகளுக்கு 18 வயது. இந்த நிலையில், போதைக்கு அடிமையான அந்த இளைஞன் திருமண பந்தத்தில் இணைவது நல்லதல்ல. குறித்த இளைஞன் அந்தப் பழக்கத்திலிருந்து விடுபட்டால், அவரின் திருமணத்தை எமது பள்ளிவாசல் நிர்வாகம் முன்னின்று நடத்தி வைக்கும்,” என்றும் அக்கரைப்பற்று பெரிய ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் சபீஸ் கூறினார்.

சம்பந்தமில்லாத ஒன்றை கருவியாகப் பயன்படுத்தியுள்ளதாக விமர்சனம்

இது இவ்வாறிருக்க, அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசலின் இந்த தீர்மானத்தை கடுமைாக விமர்சித்திருக்கிறார் அக்கரைப்பற்று மாநகர சபை மற்றும் கிழக்கு மாகாண சபை ஆகியவற்றின் முன்னாள் உறுப்பினரான ஏ.எல். தவம்.

ஏ.எல். தவம்

திருமணம் முடிப்பதற்கு பள்ளிவாசல்களின் அனுமதி தேவையில்லையென்றும், அவ்வாறான ஒரு விடயத்தை – போதைப்பொருளை ஒழிப்பதற்கான கருவியாக பயன்படுத்துவது புத்திசாலித்தனமல்ல என்றும் தவம் குறிப்பிடுகின்றார்.

இது குறித்து பிபிசி தமிழிடம் அவர் பேசுகையில், “அக்கரைப்பற்றில் அரசியலுடன் தொடர்புபட்டவர்கள் சிலர் – போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபடுவதாக பகிரங்க குற்றச்சாட்டு உள்ளது. அப்படியிருக்கையில், போதைப்பொருள் பாவனையில் சிக்கியுள்ள அப்பாவி இளைஞர்களை சமூகத்திலிருந்து ஒதுக்கும் வகையிலான தீர்மானத்தை பள்ளிவாசல்கள் எடுக்கக் கூடாது” என்றார்.

மேலும், “சீப்பை ஒளித்து வைத்து விட்டு, திருமணமொன்றை நிறுத்த நினைக்கும் கோமாளித்தனமான நடவடிக்கை’யாகவே, அக்கரைப்பற்று பள்ளிவாசலின் இந்தத் தீர்மானம் உள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பில் பள்ளிவாசலொன்று இவ்வாறான நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன்னர், அது தொடர்பான அரச நிறுவனங்கள் மற்றும் சட்டம், ஒழுங்குக்கு பொறுப்பான அமைப்புகளுடன் இணைந்து, பொறிமுறையொன்றை உருவாக்க வேண்டுமென்றும் தவம் வலியுறுத்தினார்.

மேலும் அக்கரைப்பற்று பள்ளிவாசலின் இந்தத் தீர்மானம், சம்பந்தப்பட்ட குடும்பத்தினருக்கு மட்டும் தெரியப்படுத்தப்படாமல், சமூக ஊடகங்களில் அம்பலப்படுத்தப்பட்டு – பெரியளவில் பிரசாரப்படுத்தப்படுவதன் பின்னணியில் ஒரு வகை அரசியல் உள்ளதாகவும் தவம் குற்றம் சாட்டுகிறார்.

தடுப்பு தண்டனை – சமூகத்தில் மாற்றத்தை ஏற்படுத்தும்: மனநல மருத்துவர் சரப்டீன்

இந்த நிலையில், அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசலின் மேற்படி தீர்மானத்தை Deterrent punishment (தடுப்பு தண்டனை) எனக் குறிப்படும் மனநல மருத்துவர் யூ.எல். சரப்டீன், “சமூகத்தில் ஒரு பிழையை மற்றவர்கள் செய்யாதிருக்கும் பொருட்டு, அந்தப் பிழையைச் செய்த நபர் ஒருவருக்குக் கொடுக்கப்படும் தண்டனையே Deterrent punishment” என, அவர் விளக்கமளித்தார்.

‘போதைப்பொருள் பயன்படுத்தும் ஒருவர், இஸ்லாமிய ரீதியாக திருமணம் செய்துகொள்வதற்கு ஒப்புதல் வழங்காதிருக்க, அக்கரைப்பற்று பெரிய பள்ளிவாசல் எடுத்துள்ள தீர்மானம், எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்தும்’ என, மனநல மருத்துவர் சரப்டீனிடம் பிபிசி தமிழ் வினவியபோதே, அவர் இந்தப் பதிலை வழங்கினார்.

டொக்டர் சரப்டீன்

பள்ளிவாசலின் இந்த தீர்மானத்தினால் இளைஞர்கள் மத்தியில் ஒருவகை அச்சம் ஏற்படும் என்றும், தமது திருமணத்தின் போது இவ்வாறான சச்சரவுகள் ஏற்படுவதை இளைஞர்கள் விரும்ப மாட்டார்கள் எனவும் அவர் கூறினார்.

“நமது வீட்டிலுள்ள பெண் பிள்ளைக்கு போதைப்பொருள் பாவிக்கும் ஒருவரை திருமணம் முடித்து வைக்க நாம் ஒருபோதும் விரும்ப மாட்டோம் அல்லவா? அதைத்தான் குறித்த பள்ளிவாசல் செய்திருக்கிறது. குடும்பம் சார்பாக நாம் எடுக்கும் தீர்மானத்தை, அந்தப் பள்ளிவாசல் – ஊர் சார்பாக எடுத்திருக்கிறது” என்று அவர் குறிப்பிட்டார்.

“இந்த இடத்தில் அந்தப் பள்ளிவாசலின் தீர்மானம், தனி நபர் சுதந்திரத்தைப் பாதிப்பதாகவும் வாதிட முடியும். ஆனால், சமூக நலனை முன்னிறுத்தி பள்ளிவாசலின் தீர்மானம் சரியானது. தனிநபருக்கு சுதந்திரத்தை வழங்கப்போய், ஓர் ஊரை அழித்து விட முடியாது. தனி மனிதர் ஒருவருக்கான சுதந்திரம் என்பது, முழு சமூகத்தையும் பாதிப்பதாக அமையக் கூடாது. அந்த அடிப்படையில் குறித்த பள்ளிவாசல் எடுத்துள்ள தீர்மானத்தை பிழை எனக் கூற முடியாது” என்றார்.

சட்டங்கள் என்பது சமூகங்களின் நலனுக்கானவை என்பதை சுட்டிக்காட்டிய டொக்டர் சரப்டீன், தமது சமூக நலனுக்காகவும், தமது சமூகத்தைப் பாதுகாப்பதற்காகவும் அவர்கள் (பள்ளிவாசல்) இவ்வாறானதொரு தீர்மானத்தை எடுத்துள்ளார்கள் எனக் கூறினார்.

“ஒருவருக்கு பள்ளிவாசல் ஒன்றின் அங்கிகாரம் தேவைப்படுமானால், அவர் அந்தப் பள்ளிவாசலின் கட்டுப்பாடுகளுக்கு இணங்கி நடத்தல் வேண்டும் என்று குறித்த பள்ளிவாசல் எதிர்பார்க்கிறது”.

“குறித்த நபரை திருமணம் செய்யக்கூடாது என்று, அந்தப் பள்ளிவாசல் கூறவில்லை என்பதையும் கவனிக்க வேண்டும். ‘நீங்கள் திருமணம் செய்யலாம். ஆனால், இஸ்லாமிய அடிப்படையில் நீங்கள் திருமணம் செய்வதற்கு நாங்கள் ஒப்புதல் வழங்க மாட்டோம்’ என்றுதான் அந்தப் பள்ளிவாசல் கூறுகின்றது” எனவும் சரப்டீன் குறிப்பிட்டார்.

பள்ளிவாசல் என்பது – சமூக நிறுவனம் எனக் கூறும் அவர், “அவை வழங்கும் இவ்வாறான ‘தடுப்பு தண்டனை’கள் (Deterrent punishment) சமூகத்தில் நல்ல மாற்றங்களை ஏற்படுத்தும் என்றார்.

போதைவஷ்து பயன்படுத்துவதால் ஏற்படும் தீய விளைவுகளை நினைத்துப் பார்க்கையில், அக்கரைப்பற்று பள்ளிவாசலின் இந்தத் தீர்மானம் சிறந்தது என்றும் டாக்டர் சரப்டீன் தெரிவித்தார்.

நன்றி: பிபிசி தமிழ்

Comments

புதிது பேஸ்புக் பக்கம்