தினேஷ் ஷாஃப்டர் கொலையில், நெருங்கிய நண்பர்: புலனாய்வாளர்கள் சந்தேகம்

🕔 December 20, 2022

தொழிலதிபர் தினேஷ் ஷாஃப்டர் கொலையில் அவரின் நெருங்கிய நண்பர் ஒருவர் இருந்திருக்கலாம் என்று குற்றப்புலனாய்வுத் திணைக்களம்  சந்தேகம் வெளியிட்டுள்ளது.

கொலை விசாரணையின்போது, இதுவரை சேகரிக்கப்பட்ட ஆதாரங்களில் இருந்து இது தெரியவந்துள்ளதாக அரச ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஷாஃப்டரின் கார் – பொரளை மயானத்தில் நிறுத்தப்பட்ட விதத்தை பார்க்கும்போது, அதனை செலுத்திச்சென்றவர், அங்குள்ள வீதிகளைப் பற்றி நன்கு புரிந்து வைத்திருப்பவராக இருந்துள்ளார்.

எனவே பொரளை மயானத்துக்கு வருமாறு யாரோ தினேஷ் ஷாஃப்டரை ஏமாற்றியிருக்கலாம் என்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் கருதுகின்றனர்.

தினேஷ் ஷாஃப்டர் திடீரென பொரளை செல்வதாக கூறி, கொழும்பு ஃப்ளவர் வீதியிலுள்ள தனது வீட்டில் இருந்து வெளியேறியதும், அவரது கார் நேரடியாக பொரளை பொது மயானத்துக்குச் சென்றமையும், அவரின் தொலைபேசியின் மூலம் தெரியவந்துள்ளமை இந்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளன.

சந்தேகத்துக்குரிய பலரை புலனாய்வாளர்கள் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேலும், ஷாஃப்டர் கொலை செய்யப்பட்ட நாளில், அவரின் வாகனத்தை சந்தேகத்துக்கிடமான முறையில் பின்தொடர்ந்த வாகனம் ஒன்றை – புலனாய்வாளர்கள் அவதானித்துள்ளனர்.

தினேஷ் ஷாஃப்டர் போன்ற உயர்மட்ட தொழிலதிபர், ஒருவரை சந்திக்க மயானத்துக்கு செல்வது என்பது அசாதாரணமான நிகழ்வாகும்.

அவர் சாரதியுடன் வந்திருக்கலாம். எனினும் அவர் வீட்டில் இருந்து தனியாகவே வந்துள்ளார். எனவே, மிகவும் தனிப்பட்ட விடயங்களுக்காக இந்தப் பயணத்தை அவர் மேற்கொண்டதாக தெரிகிறது.

தாம், நம்பும் ஒருவரை சந்திக்க அவர் அங்கு வந்திருக்கலாம் அல்லது யாரோ அவரை ஏமாற்றி வரச் செய்திருக்கலாம் என்ற பல கோணங்களில் புலனாய்வாளர்கள் விசாரித்து வருகின்றனர்.

அவர் பயணித்த வீதியில் – இடையில் யாராவது காரினுள் ஏறவில்லை என்றால், மயானத்தில் அவரைச் சந்திக்க ஒருவர் காத்திருந்துள்ளார்..

அந்த நபர் பெரும்பாலும் கொலையாளியாக இருக்க வாய்ப்புள்ளது என்றும் பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

இந்தநிலையில், தினேஷ் ஷாஃப்டரை மயானத்துக்கு அழைத்து வந்தவர், அவரை கொல்லும் நோக்கில் அழைத்து வந்துள்ளதாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அத்துடன் இந்த கொலையானது திடீர் கோபத்தினாலோ அல்லது தற்செயலாக நடந்த சம்பவத்தினாலோ நடந்ததல்ல என்றும் புலனாய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர்.

தினேஷ் ஷாஃப்டர் காரின் ஓட்டுநர் இருக்கையில் இருந்தபோது, இந்த குற்றம் நடந்துள்ளது. ஏனெனில் அவரின் கார் கண்டுபிடிக்கப்பட்டபோது அவர் ஓட்டுநர் இருக்கையிலேயே இருந்தார்.

அவரின் வணிக பங்குதாரரும், மயானத் தொழிலாளியும் வழங்கிய வாக்குமூலங்களில் இருந்து இது தெளிவாகிறது.

ஷாஃப்டர் கண்டுபிடிக்கப்பட்டபோது, அவரின் கைகள் கட்டப்பட்டிருந்தன. மயானத்தைச் சுற்றிக் காணப்படும் கயிறுகள் போன்றவற்றால் கைகள் கட்டப்படாமல், றப்பர் நாடாக்களால் கட்டப்பட்டிருந்தன.

கயிறுகளால் கட்டுவதை விட றப்பர் நாடாக்களை வேகமாகவும் எளிதாகவும் கட்டலாம் என்பது இதற்கான காரணமாக இருக்கலாம்.

முதல் பார்வையில், இந்த நாடாக்கள் – குறித்த பகுதியில் இருந்து எடுக்கப்பட்டதாக தெரியவில்லை.

அத்துடன் றப்பர் நாடாக்கள், மயானங்களில் கிடைப்பதில்லை. இதன்படி, இந்த நாடா – ஷாஃப்டரை கொலை செய்வதற்காக, மயானத்துக்கு கொண்டு வரப்பட்டதாக தெரிகிறது என்று பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் திணைக்களப் புலனாய்வாளர்கள், கொலை விசாரணையில் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும், கொலையின் பின்னணியில் உள்ள உண்மைகள் விரைவில் வெளியாகும் என நம்புவதாகவும் கூறுகின்றனர்.

இதேவேளை, கொலைச் சம்பவம் தொடர்பான முக்கிய தகவல்களைக் கண்டறிய நேற்று எட்டு புகைப்படக்கருவிகள், சோதனை செய்யப்பட்டதாகவும், இதுவரை 50 சிசிடிவி கருவிகளின் காட்சிகள் ஆய்வு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, அவரின் கார் – மயானத்துக்குள் நுழைந்தபோது தினேஷ் ஷாஃப்டர் அதில் தனியாகவே இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

தொடர்பான செய்தி: தினேஸ் கொலை: கிறிக்கெட் முன்னாள் வர்ணனையாளருக்கு வெளிநாடு செல்ல தடை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்