
இலங்கை சட்டக் கல்லூரிக்கான அனுமதிப் பரீட்சைக்கு ஆங்கில மொழியில் மட்டும் தோற்ற வேண்டும் என்பதை ரத்துச்செய்யும் வகையில், அடுத்த வாரம் நாடாளுமன்றில் முன்மொழிவு சமர்ப்பிக்கப்படவுள்ளது.
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச இதனை இன்று (08) நாடாளுமன்றில் தெரிவித்தார்.
எதிர்க்கட்சிகள் மற்றும் ஏனைய தரப்புக்கள் தொடர்ந்தும் விடுத்து வரும் கோரிக்கைகக்கு இணங்க, இதனை தாம் நாடாளுமன்றில் முன்வைப்பதாக நீதியமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
சட்டக்கல்லூரிக்கான அனுமதிப் பரீட்சைக்கு ஆங்கில மொழியில் மாத்திரமே தோற்ற வேண்டும் என்ற வர்த்தமானியை முன்னாள் நீதியமைச்சர் அலி சாப்ரி வெளியிட்டார்.
எனினும் இதனை மூன்று வருடங்களுக்கு பின்னர், நடைமுறைப்படுத்துமாறு தாம் விடுத்த கோரிக்கையை, நீதி கல்விச் சபை நிராகரித்துள்ளதாக நீதியமைச்சர் இன்று நாடாளுமன்றில் கூறினார்.
எனவே, பல்வேறு தரப்பினர் மத்தியில் இருந்து தொடரும் கோரிக்கைகளை கருத்திற்கொண்டு, முன்னர் வெளியிடப்பட்ட வர்த்தமானியை நாடாளுமன்றத்தின் ஊடாக ரத்துச்செய்ய முடியும் என்று நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ குறிப்பிட்டார்.
இதனை மையமாகக்கொண்டே தாம் அடுத்த வாரம் அதற்கான யோசனையை முன்வைப்பதாக அமைச்சர் விஜயதாஷ மேலும் தெரிவித்துள்ளார்.



