ஆசிரியர்களின் ஆடைகளில் மாற்றம் மேற்கொள்ளப்படாது; ஸ்டாலின் கோரிக்கைக்கு அமைச்சர் சுசில் பதில்

🕔 November 4, 2022

சிரியர்கள் மற்றும் மாணவர்களின் உடைகளில் எந்த மாற்றமும் செய்யப்படாது என, கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின் விடுத்திருந்த கோரிக்கையொன்றுக்கு பதிலளிக்கும் வகையில், அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

விவேகானந்தா வித்தியாலயத்தில் இடம்பெற்ற புத்தாக்க கண்காட்சியில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

“பாடசாலை முறைமையானது அதிபர் மற்றும் ஆசிரியர்களைப் பின்பற்றும் 42 லட்சம் பிள்ளைகளின் ஒழுக்கத்தில் தங்கியிருக்கிறது. எனவே அந்த பாடசாலைகளில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அணியும் உடைகளில் எந்த மாற்றங்களையும் மேற்கொள்ள கல்வியமைச்சு விரும்பவில்லை” என அவர் அங்கு குறிப்பிட்டார்.

“மற்ற நாடுகள் மற்றும் மேற்கு நாடுகளின் கருத்துகளின் அடிப்படையில் நமது கலாச்சாரம் மாற்றப்படவில்லை” என்றும் அவர் கூறினார்.

“ஒரு பத்திரிகையில் வெளியான செய்தியைப் பார்த்துவிட்டு – மகா சங்கத்தினர், இந்து, முஸ்லிம் மதத் தலைவர்கள், பெரியவர்கள், கல்வியாளர்கள், பழைய மாணவர் சங்கங்கள் மற்றும் மேம்பாட்டுச் சங்கங்கள்; ‘கலாச்சார அடையாளத்தில் எந்த மாற்றத்தையும் செய்ய வேண்டாம்’ என்று தனிப்பட்ட முறையில் என்னிடம் கேட்டுக் கொண்டனர்” என்றும் அவர் குறிப்பிட்டார்.

“எங்கள் ஆசிரியர்களில் 99 வீதமானோர் இந்த உடையை மாற்ற உடன்படவில்லை என்று நான் நம்புகிறேன். எங்கள் வழக்கமான ஆடைகளை நாங்கள் அணிவோம். நம் கலாச்சாரத்தை காப்போம். பாடசாலைகளில் நம் குழந்தைகளை ஒழுக்கமாக உருவாக்குவோம்”.

“மற்றவர்கள் விரும்பும் நிகழ்ச்சி நிரலின் படி நாங்கள் வேலை செய்யக்கூடாது. சிலர் கலாச்சாரத்தை மாற்ற முயற்சித்தாலும், கல்வி அமைச்சு ஆசிரியர்களின் உடைகளில் எந்த மாற்றத்தையும் செய்யவில்லை” என, அவர் மேலும் தெரிவித்தார்.

முன்னர், இலங்கை ஆசிரியர் சங்க செயலாளர் ஜோசப் ஸ்டாலின், ஆசிரியர்களுக்கு இலகுவான ஆடைகளுடன் பாடசாலைகளுக்கு வருவதற்கு இடமளிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்த நிலையில், அமைச்சர் இந்தக் கருத்தை வெளியிட்டுள்ளார்.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றில் பேசிய ஜோசப் ஸ்டாலின்; “ஆசிரியர்களுக்கான ஆடை சுதந்திரத்தால், கலாசாரம் சீர்கெடாது என்றும், தமது கோரிக்கைக்கு அமைச்சர் தீர்வொன்றை வழங்க வேண்டுமெனவும் கேட்டுக் கொண்டார்.

Comments