
அமைச்சரவை அந்தஷ்துள்ள அமைச்சர்களாக மேலும் 12 பேர் அடுத்த வாரம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்ய உள்ளனர்.
பதவிப் பிரமாணம் எதிர்வரும் திங்கட்கிழமை (12) அல்லது செவ்வாய்க்கிழமை (13) இடம்பெறும் என ஜனாதிபதி அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இவ்வாறு அமைச்சரவை அமைச்சர்களாக பதவியேற்கவுள்ள 12 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 10 பேர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேசிய காங்கிரஸ் தலைவர் ஏ.எல்.எம். அதாஉல்லா மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் செயலாளர் ஜீவன் தொண்டமான் ஆகியோரும் அமைச்சர்களாக பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளனர்.
தற்போது 18 பேர் அமைச்சரவை அமைச்சர்களாக உள்ளனர். மேலும் 12 பேர் நியமிக்கப்பட்டவுன், அமைச்சர்களின் எண்ணிக்கை 30 ஆக அதிகரிக்க உள்ளது.
இதேவேளை தற்போதைய அமைச்சர்கள் பலரின் பதவிகளில் மாற்றங்களை மேற்கொள்வது குறித்தும் ஜனாதிபதி கவனம் செலுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.
இருந்தபோதிலும் வெளிவிவகாரம், விவசாயம், மின்சாரம் மற்றும் எரிசக்தி, காணி, சுற்றுலா, தொழில், வெளிநாட்டு வேலைவாய்ப்பு, கல்வி மற்றும் நீர்ப்பாசனம் உட்பட பல அமைச்சுக்களில் மாற்றங்களை மேற்கொள்வதில்லை என ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரங்கள் மேலும் தெரிவித்துள்ளன.



