தலைப்புச் செய்திகள்

ராஜாங்க அமைச்சர் பதவிகளைப் பெற்றுள்ள சுதந்திரக் கட்சி எம்பிகள் குறித்து, தலைவர் மைத்திரி கண்டனம்

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள், கட்சியின் எவ்வித அனுமதியுமின்றி ராஜாங்க அமைச்சுப் பதவிகளை ஏற்றுள்ளதாக, அந்தக் கட்சின் தலைவர் – முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 06 நாடாளுமன்ற உறுப்பினர்கள், நேற்று ராஜாங்க அமைச்சர்களாக பதவியேற்றனர்.

இடைக்கால அரசாங்கம் ஒன்று ஸ்தாபிக்கப்படுமானால் மாத்திரமே, அரசாங்கத்துக்கு ஆதரவளித்து, பதவிகளை ஏற்க ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுக் கூட்டத்தில் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டிருந்ததாக கட்சித் தலைவர் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அறிக்கை ஒன்றின் மூலம் குறிப்பிட்டுள்ளார்.

அந்தத் தீர்மானத்துக்கு எதிராக செயற்பட்டு, அமைச்சுப் பதவிகளை ஏற்றுக்கொண்டதை அனுமதிக்க முடியாது எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் தங்களது தனிப்பட்ட லாபத்தை அடிப்படையாகக்கொண்டு ராஜாங்க அமைச்சுப் பதவிகளை ஏற்றமை குறித்து தாம் வருத்தம் தெரிவிப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.