தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவி விபத்தில் சிக்கி பலி: திருணமாகி 03 மாதங்களேயான நிலையில் சோகம்

🕔 August 31, 2022

– பாறுக் ஷிஹான் –

தென்கிழக்குப் பல்கலைக்கழகத்துக்கு தனது கணவருடன் மோட்டார் பைக்கில் பயணித்துக் கொண்டிருந்த மாணவியொருவர், வீதி விபத்தொன்றில் சிக்கி, சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இன்று புதன்கிழமை காலை, நிந்தவூர் – அட்டப்பள்ளம் பிரதான வீதியில் பல்கலைக்கழத்துக்கு அருகாமையிலே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தில் உயிரிழந்த பல்கலைக்கழக மாணவியின் உடல், பிரேத பரிசோதனையின் பின்னர் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

காத்தான்குடியிலிருந்து தனது கணவருடன் – குறித்த மாணவி மோட்டார் பைக்கில் பயணித்துக் கொண்டிருந்தபோது வாகனமொன்றுடன் மோதுண்டு இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.

விபத்தில் காயமடைந்த பல்கலைக்கழக மாணவியின் கணவர் தற்போது நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.

முதலாம் வருட மாணவி அஸ்பா

விபத்தில் பலியானவர் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தில் முதலாம் வருடம் கலைப் பிரிவில் கற்றுவந்த காத்தான்குடி 05ஆம் பிரிவைச் சேர்ந்த 22 வயதுடைய (பிறந்த திகதி 13 செப்டம்பர் 2000) பாத்திமா அஸ்பா என்பவராவார்.

இவர் திருமண பந்தத்தில் இணைந்து மூன்று மாதங்களே ஆகின்றமை குறிப்பிடத்தக்கது.

விபத்தையடுத்து சம்மாந்துறை நீதிமன்ற நீதிவானின் கட்டளையின் பிரகாரம், பிரதேச மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் – ஜவாஹிர் சம்பவ இடத்துக்குச் சென்று மரண விசாரணை மேற்கொண்டார்.

நிந்தவூர் ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டிருந்த  பல்கலைக்கழக மாணவியின் சடலத்தை சம்மாந்துறை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி – பிரேத  பரிசோதனையை மேற்கொள்ளுமாறு, சட்ட வைத்திய அதிகாரிக்கு பிரதேச மரண விசாரணை அதிகாரி அப்துல் ஹமீட் அல் – ஜவாஹிர் உத்தரவிட்டார்.

விபத்தில் பல்கலைக்கழக மாணவியின் தலைப்பகுதியில் ஏற்பட்ட பாரிய காயம் காரணமாக அதிகளவு இரத்தப்போக்கு ஏற்பட்டதால், இம்மரணம் சம்பவித்துள்ளது என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. 

இதனையடுத்து மாணவியின் உடல் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்