தலைப்புச் செய்திகள்

ஊடக சந்திப்பில் சனத் நிஷாந்த வெளியிட் கருத்து, நீதிமன்ற அவமதிப்பா: கண்டறிந்து அறிக்கையிடுமாறு சிஐடிக்கு உத்தரவு

நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் கருத்துக்களை வெளியிட்டாரா என்பதை கண்டறிந்து உடனடியாக தமக்கு அறிக்கை சமர்ப்பிக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான், குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு (சிஐடி) உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மே 09ஆம் திகதி கொழும்பு காலிமுகத் திடலில் போராட்ட குழுவினர் மீது தாக்குதல் நடத்தப்பட்டமை தொடர்பிலான வழக்கு நேற்று (240 விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

ஆர்ப்பாட்டக்காரர்கள் சார்பில் முன்னிலையான ஜனாதிபதியின் சட்டத்தரணி உபுல் ஜயசூரிய, நீதிமன்றத்தின் பணிகளுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் அறிக்கைகள் மற்றும் செயற்பாடுகளில் இருந்து விலகியிருக்குமாறு பிரதிவாதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள பின்னணியில், நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த ஊடக சந்திப்பொன்றில், சில சட்டத்தரணிகள் மற்றும் நீதிபதிகள் போராட்டக்காரர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக கருத்துவெளியிட்டதாகக் கூறினார்.

இந்தக் கூற்றை நிரூபிக்கும் வகையில் ஜனாதிபதியின் சட்டத்தரணி அது தொடர்பான குரல் பதிவு அடங்கியதாக கூறப்படும் காணொளி ஒன்றையும் முன்வைத்தார்.

இதன்போது, ​​நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, ஊடகங்களில் தெரிவித்த விடயங்கள் மூலம் நீதித்துறைக்கு அல்லது அதன் செயற்பாடுகளுக்கு ஏதேனும் அவமதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கோட்டை நீதவான் திலின கமகே குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவித்தார்.

அதற்காக, ஊடகங்களிடமுள்ள செம்மைப்படுத்தப்படாத (எடிட்) காணொளி பதிவுகளை ஆராய்ந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு கோட்டை நீதவான் மேலும் பணிப்புரை விடுத்துள்ளார்.

இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த மற்றும் மிலான் ஜயதிலக்க ஆகியோரின் கையடக்க தொலைபேசிகளை உடனடியாக நீதிமன்றில் ஒப்படைக்குமாறும் கோட்டை நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அத்துடன், முன்னைய உத்தரவின் பிரகாரம் கையடக்கத் தொலைபேசிகள் நீதிமன்றில் கையளிக்கப்படாமை தொடர்பில் கடும் அதிருப்தி தெரிவித்த கோட்டை நீதவான், இது தொடர்பில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அத்துடன், நீதிமன்ற உத்தரவு மற்றும் சம்பவம் தொடர்பில் விசாரணைகளுக்கு இணங்கவில்லையாயின், பிணை ரத்து செய்யப்பட்டு மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்படுவர் என அறிவுறுத்தினார்.

மேலும், ஆர்ப்பாட்டக்காரர்களை தாக்கியதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள டான் பிரியசாத் பயன்படுத்திய கையடக்க தொலைபேசிகளை உடனடியாக நீதிமன்றில் ஒப்படைக்குமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தான் பயன்படுத்திய கையடக்கத் தொலைபேசி பழுதுபார்ப்பதற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், திருத்தத்தின் பின்னர் நீதிமன்றில் ஒப்படைக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.