தலைப்புச் செய்திகள்

சிறுவர் ஒருவரிடமிருந்து கைப்பேசி உள்ளிட்ட பொருள்களை கொள்ளையிட்ட 04 பொலிஸார் கைது

கொள்ளைச் சம்பவமொன்றுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் மாலபே பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் நான்கு பொலிஸார் இன்று (23) கொட்டாவ பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கொட்டாவ, வித்தியால சந்தியில் இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றது.

சிறுவர் ஒருவரின் கைப்பேசி மற்றும் தங்கச் சங்கிலியை மேற்படி பொலிஸார் கொள்ளையடித்துச் சென்றதாகக் கூறப்படுகிறது.

தாம் வீரகெட்டிய பிரதேசத்தில் வசிப்பவர் எனவும், வித்தியால சந்தியில் வசிக்கும் தனது சகோதரி ஒருவரை பார்வையிடச் சென்றதாகவும் பாதிக்கப்பட்ட நபர் தெரிவித்துள்ளார். நான்கு பொலிஸாரும் ஒரு வீதியைப் பற்றி விசாரிக்கும் சாக்குப்போக்கில் தன்னை அணுகி, தன்னிடமிருந்த பொருட்களைக் கொள்ளையடித்ததாக அவர் கூறியுள்ளார்.

விசாரணையின் போது தங்கச் சங்கிலி மற்றும் கைப்பேசி ஆகியவற்றை பொலிஸார் மீட்டுள்ளதுடன் சந்தேக நபர்கள் பயன்படுத்திய முச்சக்கர வண்டியையும் கைப்பற்றியுள்ளனர்.

நான்கு சந்தேக நபர்களில் ஒரு பொலிஸ் சார்ஜன்ட் மற்றும் மூன்று கான்ஸ்டபிள்கள் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர். அவர்கள் ஹோமாகம நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

மேலதிக விசாரணைகளை கொட்டாவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.