வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் சில அதிகாரிகளுக்கு ‘தேவையற்ற’ சலுகைகள்: தான் நிறுத்தியதாக அதன் தலைவர் தெரிவிப்பு

🕔 August 21, 2022

– முனீரா அபூபக்கர் –

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மேல்மட்டத்தில் இருந்து கீழ்மட்டம் வரை பரவியுள்ள ஊழலை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதன் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி தெரிவித்தார்.

சில அதிகாரிகளுக்கு அரசியல் செய்வதற்காக வழங்கப்பட்ட பல சலுகைகளை தாம் நீக்கியதாகவும் அவர் கூறினார்.

எனவே சில தொழிற்சங்கங்களும் குழுக்களும் தமக்கு எதிராக பல்வேறு அவதூறு தாக்குதல்களையும் சதிகளையும் மேற்கொண்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது, தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் சில உத்தியோகத்தர்களுக்கு வாடகை அடிப்படையில் பெறப்பட்ட ‘கெப்’ வண்டிகள் வழங்கப்பட்டதாகவும் ஒவ்வொரு வண்டிக்கும் மாதாந்தம் 02 லட்சம் ரூபாவை அதிகார சபை செலுத்த வேண்டியிருந்ததாகவும் இதற்கு மேலதிகமாக 245 லீட்டர் டீசலும் வழங்கப்பட வேண்டி இருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அவர்கள் முழுமையாக அரசியல் நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டவர்கள் என்றும் அவர்களால் அதிகார சபைக்கு எந்த சேவையும் நடக்கவில்லை எனவும் தெரிவித்த தலைவர் ரஜீவ் சீரியாராச்சி; தான் தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட பின்னர் உடனடியாக அந்த சலுகைகள் அனைத்தையும் அகற்றி அவர்களுடைய பதவிகளுக்குரிய சலுகைகளை மட்டும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்ததாகவும் கூறினார்.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் மாவட்ட முகாமையாளர்களுக்கான செயலமர்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி இதனைக் குறிப்பிட்டார். கண்டி ரஜபிஹில்ல ஒக்ரே மண்டபத்தில் இந்த செயலமர்வு நடைபெற்றது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வீட்டுக்கடனாக வழங்கப்பட்ட 10 பில்லியன் ரூபா நிலுவைத் தொகையை பெற்றுக்கொள்வதற்கான இலக்கு வேலைத்திட்டத்தை தயாரிப்பதற்காக இந்த செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Comments

புதிது பேஸ்புக் பக்கம்