
– முனீரா அபூபக்கர் –
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையினால் வழங்கப்பட்ட கடன் பணத்தை மீளப் பெறுவதற்கான அவசர ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மாதாந்தம் 300 மில்லியன் ரூபாவை மீளப் பெறுவதை இலக்காக வைத்து வேலைத்திட்டம் ஒன்றை துரிதமாக நடைமுறைப்படுத்துமாறு நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் அதிகாரிகளுக்கு நேற்று (19) அறிவுறுத்தல் வழங்கினார்.
மாதாந்தம் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை 563 மில்லியன் ரூபா கடன் தொகையை அறவிட வேண்டியுள்ளது.
அந்தப் பணத்தை துரிதமாக அறவிடுவது சம்பந்தமாகவும் நிறுவனத்தின் எதிர்கால நடவடிக்கை சம்பந்தமாகவும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் மாவட்ட முகாமையாளர்களுக்கு அறிவுறுத்தும் வகையில் கண்டியில் நடைபெற்ற விசேட செயலமர்வில் அமைச்சர் இந்த அறிவுறுத்தல்களை வழங்கினார்.
கண்டி ரஜபில்ல ஒக்ரே மண்டபத்தில் இந்த செயலமர்வு நடைபெற்றது.
தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை ஆரம்பிக்கப்பட்ட 1979இல் இருந்து இன்று வரை இந்நாட்டு மக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகையில் 10 பில்லியன் ரூபா இன்னும் அறவிடப்பட வேண்டி இருக்கிறது.
அதில் 563 மில்லியன் ரூபாவை மாதாந்தம் அறவிடவேண்டி இருந்தாலும் கடந்த ஜூலை மாதம் வரை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையால் 127 மில்லியன் ரூபாவை மாத்திரமே அறவிட முடியுமாக இருந்தது. இது மாதாந்தம் அறவிடப்பட வேண்டிய தொகையில் ஒரு 23% என்று குறித்த கலந்துரையாடலில் தெரியவந்தது.
2015 – 2019 காலப் பகுதியில் குறித்த அதிகார சபைக்கு சொந்தமான சகல சொத்துக்கள் மற்றும் பணம் பயன்படுத்தப்பட்டு கடன்கள் வழங்கப்பட்டன. அந்தக் கடனுக்கான முழு தவணையையும் செலுத்தாததால் கடனை மீளப்பெறுவதில் சிக்கல்கள் உருவாகியுள்ளமை இந்த நிலைக்கு முக்கிய காரணம் என்று அந்த அதிகார சபையின் பொது முகாமையாளர் கே.ஏ. ஜனாக இங்கே தெரிவித்தார்.
மேலும், நாட்டில் நிலவும் கோவிட் தொற்று, பொருளாதார பிரச்சினை மற்றும் அரசியல் ஸ்திரமின்மை போன்ற காரணங்களால் இந்த கடனை மீள அறவிடுதல் குறைவடைந்துள்ளதாகவும் அவர் சுட்டிக் காட்டினார்.
கடனை மீளப்பெறுவதற்கு எதிர்வரும் காலங்களில் மாவட்ட முகாமையாளர்கள் அதிக கவனம் செலுத்த வேண்டுமென அந்த அதிகார சபையின் தலைவர் ரஜீவ் சூரிய ஆராச்சி தெரிவித்தார். கடனை முறையாக சேகரிக்க முடியாத நிலை ஏற்பட்டால் நிறுவனத்தின் உத்தியோகத்தர்களுக்கு சம்பளத்தைக் கொடுப்பதற்குக் கூட முடியாத நிலை ஏற்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதன்படி, மாதாந்தம் 300 மில்லியன் ரூபா கடனை மீளப் பெற்றுக் கொள்வதே அதிகாரசபையின் இலக்கு எனவும் கூறினார்.



