
– முன்ஸிப் –
முட்டைக்கு கட்டுப்பாட்டு விலையினை அறிவித்து வர்த்தமானி அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ள போதும், சந்தையில் அந்த விலைக்கு முட்டைகளைப் பெற முடியவில்லை என மக்கள் அங்கலாய்க்கின்றனர்.
நேற்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயம் செய்து, நுகர்வோர் விவகார அதிகார சபை – அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டது.
இதன்படி, வெள்ளை முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 43 ரூபாவாகவும், சிவப்பு முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை 45 ரூபாவாகவும் நிர்ணயிக்கப்பட்டது.
இந்த நிர்ணய விலையை விட, அதிக விலைக்கு முட்டைகளை விற்பனை செய்யும் வர்த்தகர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று, நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்திருந்தது.
ஆயினும், நிர்ணயிக்கப்பட்ட இந்த விலைகளில் முட்டையை விற்பனை செய்ய முடியாது என முட்டை உற்பத்தியாளர்கள் கூறுகின்றனர்.
சிறியளவில் முட்டை உற்பத்தி செய்வோருக்கு முட்டையொன்றின் உற்பத்திச் செலவு 55 ரூபாவாக உள்ளதாகவும், பாரியளவில் உற்பத்தி செய்வோருக்கு ஆகக் குறைந்தது 45 ரூபா செலவாகிறது என்றும், கோழித் தீவன விற்பனையாளர் ஒருவர் ‘புதிது’ செய்தித்தளத்திடம் தெரிவிக்கின்றார்.
இதேவேளை, முட்டை உற்பத்தியாளர்களுக்கு எவ்வித நிவாரணத்தையும் வழங்காமல், அரசு இவ்வாறு முட்டைக்கு நிர்ணய விலை அறிவித்துள்ளமை தொடர்பில், முட்டை உற்பத்தியாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
ஆகக்குறைந்தது கோழித் தீனுக்கான விலைகளை குறைத்து விட்டு, முட்டைக்கான விலைகளையும் குறைத்து நிர்ணய விலைகளை அரசு அறிவிப்பதுதான் நியாயமாக அமையும் எனவும் முட்டை உற்பத்தியாளர் தரப்பில் கூறப்படுகிறது.
தற்போது சில்லறையாக முட்டையொன்று ஆகக்குறைந்தது 60 ரூபாவுக்கு விற்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.



