தலைப்புச் செய்திகள்

ஒலுவில் மீன்பிடி துறைமுக அகழ்வு பணிக்கு, அக்கரைப்பற்று மாநகர சபை இயந்திரங்களை வழங்கி, மேயர் உதவி

– எம்.எஸ்.எம். ஸாகிர் –

ஒலுவில் அஷ்ரப் ஞாபகார்த்த மீன்பிடி துறைமுக வாய் பகுதியிலுள்ள மண்ணை அகழ்வதற்கு அக்கரைப்பற்று மாநகர சபையின் அகழ்வு இயந்திரம் (Excavator) மற்றும் தெப்பம் போன்ற இயந்திரங்களை இன்று (16) அக்கரைப்பற்று மாநகர சபை முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகி உத்தியோகபூர்வமாக  கையளித்தார்.

கடந்த ஒரு மாத காலமாக ஒலுவில் மீனவர் துறைமுக வாய் பகுதியில் மண்ணை சமநிலைப்படுத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அம்பாறை மாவட்ட மீனவர்கள் மற்றும் அம்பாரை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் வேண்டுகளை ஏற்று, அப்பணிகளை மேலும் துரிதப்படுத்த அக்கரைப்பற்று மாநகர சபை இவ்வுதவியினை வழங்குகின்றது.

அம்பாறை மாவட்ட மீனவர்களின் நலன்கருதி இப்பாரிய வேலைத்திட்டத்தினை முன்னெடுக்க உதவிக்கரம் நீட்டிய அக்கரைப்பற்று மாநகர சபைக்கும், அதன்  முதல்வர் அதாஉல்லா அகமட் ஸகிக்கும் அம்பாறை மாவட்ட ஆழ்கடல் மீன்பிடி இயந்திரப் படகுகள் உரிமையாளர்கள் கூட்டுறவு சங்கத்தின் தலைவர் எம்.எஸ்.ஏ. நஸீர் தமது அமைப்பின் சார்பாக இதன்போது நன்றிகளைத் தெரிவித்தார். 

இந்த கையளிப்பு நிகழ்வின் போது அம்பாறை மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் உதவிப் பணிப்பாளர் எம்.எஸ்.ஏ. றியாஸ் உட்பட மாவட்ட மீனவர் சங்க பிரதிநிதிகள், மாநகர சபை உத்தியோகித்தர்கள் கலந்து கொண்டனர்.