
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ஏன் சிங்கப்பூர் சென்றுள்ளார் என்கிற கேள்விகள் தற்போது எழுந்துள்ள நிலையில், அதற்கு அரசியல் ஆய்வாளர்கள் பதிலளிக்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளனர்.
அரசியலமைப்பின் 37(1) ஆவது பிரிவின்படி, ஜனாதிபதி – சுகவீனம் காரணமாக, இலங்கையில் இல்லாத நிலை அல்லது வேறெதேனும் காரணமாக தமது பதவிக்குரிய தத்துவங்களையும், கடமைகளையும், பணிகளையும் பிரயோகிப்பதற்கும் புரிவதற்கும் நிறைவேற்றுவதற்கும் இயலாதிருப்பதாகக் கருதுவாரெனில், அத்தகைய காலத்தின்போது ஜனாதிபதி பதவியில், அவருக்குரிய பதவிக்குரிய தத்துவங்களையும், கடமைகளையும் பணிகளையும் பிரயோகிப்பதற்கும் புரிவதற்கும் நிறைவேற்றுவதற்கும் பிரதமரை அவர் நியமிக்கலாம். அத்தகைய காலத்தின் போது பிரதமர் பதவியில் பதில் கடமை ஆற்றுவதற்கென ஏனைய அமைச்சர்களில் ஒருவரையும் நியமிக்கலாம்”.
இதனனடிப்படையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மருத்துவ சிகிச்சை என்ற அடிப்படையிலேயே சிங்கப்பூரை நோக்கி பயணம் செய்துள்ளதாகவும் அத்தைய மருத்துவ சிகிச்சைக்காக வரும் நோயாளிகளை சிங்கப்பூர் ஏற்றுக் கொள்வதாகவும் அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மாலைதீவில் இருந்து சிங்கப்பூர் சென்று மருத்துவ சிகிச்சைகளை பெற்ற பிறகு, அதற்கான ஆவணங்களை சபாநாயகருக்கு அனுப்புவதன் ஊடாக – அவர் மருத்துவ விடுமுறையை பெற்றுக்கொள்வதற்கான சாத்தியம் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மருத்துவ விடுமுறைக்கான கோரிக்கையை மூன்று மாத காலத்துக்குள் கையளிக்க வேண்டும் என்பதுடன், அதன் பின்னர் அந்த விடுமுறையை நீடித்துக்கொள்வதற்கான நடைமுறையும் உள்ளதாக சட்ட வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.
இவ்வாறு மருத்துவ சிகிச்சைகளுக்காக செல்லும் போது, பதில் ஜனாதிபதி, நாட்டின் ஜனாதிபதியாக செயல்படுவார் என்பதே அரசியலமைப்பில் கூறப்பட்டுள்ள விடயமாகும்.



