
கொழும்பில் இன்று இரு வேறு பகுதிகளில் இடம்பெற்ற போராட்டங்களின்போது, பொலிஸார் – போராட்டக்காரர்களிடையே ஏற்பட்ட மோதலில் காயமடைந்தோர் எண்ணிக்கை 75 ஆக அதிகரித்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
நாடாளுமன்றத்துக்கு பிரவேசிக்கும் பத்தரமுல்லை – பொல்துவ சந்தியில் இன்றிரவு பதற்ற நிலை ஏற்பட்டது.
மேற்படி பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைப்பதற்கு பொலிஸார் கண்ணீர்புகை மற்றும் தண்ணீர்தாரை பிரயோகங்களை மேற்கொண்டனர்.
இந்த மோதலில் 33 பேர் காயமடைந்ததுடன், அவர்கள் அனைவரும் சிகிச்சைகளுக்காக கொழும்பு – தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதில் பொலிஸ் அதிகாரியொருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு – ஃப்ளவர் வீதி பிரதமர் அலுவலகத்துக்கு முன்னால் இடம்பெற்ற போராட்டத்தை கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகை மற்றும் நீர்த்தாரை பிரயோகம் மேற்கொண்டனர்.
அதன்போது, காவல்துறை மற்றும் போராட்டக்காரர்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் சம்பவத்தில் 42 பேர் காயமடைந்த நிலையில் – கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.



