தலைப்புச் செய்திகள்

கோட்டா பதவி விலகினால், அந்த இடம் யார் வசமாகும்?

ஜனாதிபதி பதவி விலகினால் அந்த இடத்துக்கு யார் வருவார் என்கிற கேள்வி, சாதாரணமாக மக்கள் மத்தியில் உள்ளது. இது அரசியலமைப்பு சார்ந்த ஒரு விடயமாகும்.

சரி அரசியலமைப்பு என்ன சொல்கிறது?

ஜனாதிபதியொருவர் மரணித்தால், பதவியிலிருந்து விலகினால் அல்லது விலக்கப்பட்டால், அப்போது பிரதமர் பதவியை வகிப்பவர் பதில் ஜனாதிபதியாக செயற்படுவார். அப்போது பிரதமரும் இல்லை என்றால் சபாநாயகர் பதில் ஜனாதிபதியாக செயற்பாடுவார்.

இது 30 நாட்களுக்கே செல்லுபடியாகும். அதற்குள் நாடாளுமன்ற உறுப்பினர்களில் ஒருவரை – ரகசிய வாக்கெடுப்பின் மூலமாக ஜனாதிபதியாக தெரிவு செய்தல் வேண்டும்.

முன்னைய ஜனாதிபதி நிறைவுசெய்த பதவிக் காலத்திலிருந்து மிகுதியுள்ள காலத்துக்கான ஜனாதிபதியாக இவ்வாறு தெரிவு செய்யப்படுபவர் இருப்பார்.

இதன்படி எதிர்வரும் 13ஆம் திகதி ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகுவதாக அறிவித்திருப்பதற்கு இணங்க நடந்தால், அப்போது பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே – பதில் ஜனாதிபதியாக செயற்படுவார்.

பதில் ஜனாதிபதியாக ரணில் ஆவதைத் தடுப்பதென்றால், ஜனாதிபதி பதவி விலகுவதற்கு முன்னராக அல்லது ஜனாதிபதி பதவி விலகும் போது, பிரதமர் பதவியிலிருந்து ரணிலும் விலக வேண்டும்.

அப்போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன பதில் ஜனாதிபதியாக செயற்படுவார்.