தலைப்புச் செய்திகள்

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை ஒழிக்க, ஒரு வாரத்துக்குள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றுபட வேண்டும்: எதிர்க் கட்சித் தலைவர் அழைப்பு

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒரு வாரத்திற்குள் ஒழிப்பதற்கு அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஒன்றிணைய வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று அழைப்பு விடுத்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று (05) உரையாற்றிய அவர்; நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு கூறினார்.

“இந்த வாரத்துக்குள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை ஒழிக்கும் முறையை நாம் கொண்டு வர முடியும். ஆனால் நிறைவேற்றுப் பிரதமரையும் அனுமதிக்க முடியாது. எங்களுக்கு அதிகார சமநிலை தேவை” என்றும் அவர் குறிப்பிட்டார்.

தனது ஐக்கிய மக்கள் சக்தி, தற்காலிக மற்றும் சந்தர்ப்பவாத அமைச்சுப் பதவிகளை ஏற்காது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ மேலும் தெரிவித்தார்.

“நாங்கள் ஆட்சிக்கு வந்தால், அது மக்களின் ஆசியுடன் இருக்கும்” என்றும் அவர் மேலும் கூறினார்.

“மக்கள் அரசாங்கத்தில் மாற்றத்தை விரும்புகிறார்கள், அதை நாடாளுமன்றம் புரிந்து கொள்ள வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.