‘சிங்க லே’ ஸ்டிகர் கலாசாரம்; இனக்கலவரமொன்றுக்கான முன்னேற்பாடு?
இலங்கை முழுவதும் தற்போது ஸ்டிக்கர் கலாசாரமொன்று, திட்டமிட்டு பரப்பப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இது, இனக்கலவரமொன்றுக்கான முன் ஆயத்தமாக இருக்கலாம் என்கிற சந்தேகமும் எழுந்துள்ளது.
முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பொதுபல சேனா முக்கியஸ்தர்கள் இணைந்து அண்மைய நாட்களாக இலங்கையில் புதிய ஸ்டிக்கர் கலாசாரமொன்றை அறிமுகப்படுத்தியுள்ள’ர்.
சிங்களவர்கள் சிங்கத்தின் வழித்தோன்றல்கள் என்று பெருமை பேசும் கோசங்களுடன் இந்த ஸ்டிக்கர் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
சிங்கலே ( சிங்க இரத்தம்) என்பதே குறித்த ஸ்டிக்கரின் வாசகமாகும். தேசப்பற்றுள்ள, சிங்கள இனப்பற்றுள்ள அனைவரும் தமது வாகனங்கள், வர்த்தக நிலையங்களில் இதனை ஒட்டிக் கொள்ள வேண்டுமென்று வலியுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறான ஸ்டிக்கர்கள் கூடுதல் தொகைக்கு விற்பனை செய்யப்படுவதன் காரணமாக பொதுபல சேனா அமைப்புக்கும் கோத்தபாயவுக்கும் நாளாந்தம் பெருந்தொகையொன்று வருமானமாக கிடைத்து வருகின்றது.
இதன் மூலம் சிங்களவர்களின் வர்த்தக நிலையங்கள் மற்றும் வாகனங்கள் தனித்து அடையாளம் காணப்படும் செயற்பாட்டை இந்த ஸ்டிக்கர் இலகுபடுத்தியுள்ளது.
இதற்கிடையே குறித்த ஸ்டிக்கர் வர்த்தகம் இனக்கலவரமொன்றுக்கான முன்னேற்பாடாக இருக்கலாம் என்ற சந்தேகம் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் மத்தியில் பலமாக எழுந்துள்ளது.
ஏனெனில் 1983ம் ஆண்டு இனக்கலவரம் தொடக்கம் கடந்த 2014ம்ஆண்டு அளுத்கமவில் நடைபெற்ற இனக்கலவரம் வரை திட்டமிட்ட இனக்கலவரங்களின் போது சிங்களவர்களின் உடைமைகளுக்கு எதுவித சேதங்களும் ஏற்படவில்லை.
குறித்த இனக்கலவரங்களின் போது தேசியக் கொடி அல்லது சிங்களக் கொடி ஏற்றி அவர்கள் தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளுமாறு வன்முறையைத் தூண்டிய அமைப்பினரால் இரகசியமாக அறிவுறுத்தப்பட்டிருந்தனர்.
இந்நிலையில் எதிர்வரும் காலங்களில் இனக்கலவரமொன்றைத் தூண்டி பெரும் சேதங்களை ஏற்படுத்தவும், அதன்போது சிங்களவர்களின் சொத்துக்களை குறித்த ஸ்டிக்கர் அடையாளத்தினூடாக பாதுகாக்கவும் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ளதா என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
இதற்கு உதாரணமாக குர்ஆனைத் தடை செய்ய வேண்டும் என்று பொது பலசேனா அமைப்பு முறைப்பாடு செய்துள்ளமை மற்றும் குரோத கருத்துக்களை தடை செய்யும் சட்டமூலத்தை வாபஸ் பெற வைப்பதில் பொது பல சேனா முன்னின்று செயற்பட்டமை போன்ற விடயங்கள் சுட்டிக்காட்டப்படுகின்றது.
அத்துடன் மிருசுவில் கூட்டுப் படுகொலை சம்பவத்தின் குற்றவாளியான இராணுவச் சிப்பாய் சுனில் ரத்நாயக்கவுக்கு விதிக்கப்பட்டுள்ள மரண தண்டனைக்கு எதிராக மேன்முறையீடு செய்வதற்கு சிங்கள மக்கள் மத்தியில் பகிரங்கமாக நிதி திரட்டப்பட்டு வருகின்றது.
அத்துடன் தமிழ் அரசியல்வாதிகளின் அழுத்தத்துக்கு அடிபணிந்து நல்லாட்சி அரசாங்கமே சிங்கள வீரர் ஒருவரை அநியாயமாக தண்டித்துள்ளதாகவும் பரப்புரை செய்யப்படுகின்றது.
நல்லாட்சி அரசாங்கத்தின் ஊடாக தமிழ் மக்கள் இராணுவத்தினரை தண்டிப்பதற்கு செயற்படுவதாகவும் ஒரு பிரம்மை ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவையெல்லாம் பொது பல சேனா முன்னின்று பகிரங்கமாக மேற்கொள்ளும் செயற்பாடுகளாகும்.
இவ்வாறான செயற்பாடுகளை கவனித்துப் பார்க்கும் போது தமிழ், முஸ்லிம் மக்களுக்கு எதிரான இனக்கலவரமொன்றை ஒரே நேரத்தில் கட்டவிழ்த்து விடுவதற்கான செயற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்படுவதாகவே கருதப்பட வேண்டியுள்ளதாக சிவில் சமூக செயற்பாட்டாளர்கள் கருத்து வெளியிட்டுள்ளனர்.