உலகில் முதலாவதாக பன்றி இதயம் பொருத்தப்பட்ட நபர் மரணம்

🕔 March 9, 2022

லகில் முதல்முறையாக பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட நபர் மரணமடைந்தார்.

பன்றியின் இதயம் பொருத்தப்பட்ட டேவிட் பென்னட், 02 மாதங்கள் மட்டுமே அதனுடன் உயிர் வாழ்ந்துள்ளார்.

கடந்த சில நாட்களாகவே அவரது நிலைமை மோசமடைந்து வந்ததாகவும் நேற்று (08) சிகிச்சை பலனின்றி பென்னட் உயிரிழந்ததாகவும் அவரின மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பன்றியின் இதயத்தை பொருத்துவதற்கான அறுவை சிகிச்சையின்போதே இதன் அபாயத்தை பென்னட் உணர்ந்திருந்தார். பென்னட்டிற்கு மனித இதயத்தை பொருத்துவதற்கான சாத்தியம் இருக்கவில்லை.

இதனால் அவரின் உயிரை காக்க வேறு வழியின்றி பன்றியின் இதயத்தை பொருத்த மேரிலான்ட் மெடிகல் சென்டர் பல்கலைக்கழக மருத்துவர்களுக்கு அமெரிக்க மருத்துவ கட்டுப்பாட்டாளர் அனுமதி வழங்கியது.

இந்த அறுவை சிகிச்சைக்கு முன்பு ஆறு வார காலம் – கருவிகளின் உதவியுடன் பென்னட் படுக்கையில் இருந்துள்ளார்.

இந்த நிலையில், கடந்த ஜனவரி 07ம் திகதி பென்னட்டுக்கு பன்றியின் இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதற்கு பின் அவர் தனது குடும்பத்துடன் நேரம் கழித்து வந்துள்ளார். வீட்டுக்கு வந்து தனது நாயை சந்திக்க வேண்டும் என்றும் எண்ணியுள்ளார். ஆனால் அவரின் நிலைமை மிகவும் மோசமடைந்துவிட்டது.

“பென்னட் ஒரு தையரியசாலி; இறுதி வரை தனக்கு ஏற்பட்ட பிரச்னையை எதிர்கொண்ட உன்னத நோயாளி” என, அவருக்கு இதய மாற்று அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவ நிபுணர் பார்ட்லே கிரிஃப்பித் புகழாரம் சூட்டியுள்ளார்.

“தந்தைக்கு செய்யப்பட்ட மாற்று அறுவை சிகிச்சை நம்பிக்கையின் தொடக்கமாக இருந்தது. முடிவாக அல்ல. இந்த வரலாற்று முயற்சியில் ஈடுபட்ட ஒவ்வொரு புதுமையான தருணத்துக்கும், ஒவ்வொரு கனவுக்கும், ஒவ்வொரு தூக்கமில்லாத இரவுக்கும் நாங்கள் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்” என பென்னட் மகன் டேவிட் ஜூனியர் தெரிவித்துள்ளார்.

தொடர்பான செய்தி: பன்றி இதயம் மனிதனுக்கு: உலகில் முதல் தடவை

Comments

புதிது பேஸ்புக் பக்கம்